

சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் முன்னாள் பயிற்சி இயக்குநர் அனில் கில் மற்றும் அவருக்கு தொடர்புடைய 4 விமான நிறுவனங்கள்மீது ஊழல், அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டின்கீழ் மத்திய சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
டிஜிசிஏவில் விமானப் பயிற்சி இயக்குநராக கேப்டன் அனில் கில் பணியாற்றியபோது, தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இயக்குநர்களாகக் கொண்டு போலி (பினாமி/ஷெல்) நிறுவனங்களை உருவாக்கி,
அதன்மூலம் பயிற்சி விமானங்களை மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்து, பின்னர் அவற்றை எல்லைப் பாதுகாப்பு பயிற்சி நிறுவனங்களுக்கு அதிக விலையில் குத்தகைக்கு விட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டில் புளூத்ரோட் ஏரோ குளோபல் பிரைவேட் லிமிடெட், ரெட்பேர்ட் ஏவியேஷன் அகாடமி பிரைவேட் லிமிடெட், சாப்ரேஸ் கார்ப்பரேட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், சேண்ட்ஹில்ஸ் ஏவியேஷன் ஐஎஃப்எஸ்சி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
புளூத்ரோட் ஏரோ குளோபல் பிரைவேட் லிமிடெட் இரண்டு செஸ்னா விமானங்களை முறையே ரூ.10 லட்சம் மற்றும் ரூ.37.5 லட்சத்திற்கு வாங்கியதாகவும், பின்னர் இந்த விமானங்கள், கில்லின் அதிகாரபூர்வ அனுமதியோடு 'ரெட்பேர்ட் ஏவியேஷன் அகாடமி' என்ற நிறுவனத்திற்கு அதிக விலைக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2021 முதல் 2023 வரை ரூ.2.16 கோடிக்கும் அதிகமாக குத்தகை வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 2022-ல் அனில் கில் ஒரு தேர்வுக் குழுவிற்குத் தலைமை தாங்கி, தனது உறவினரான விகாஸ் நைன் என்பவரை துணைத் தலைமை பறக்கும் பயிற்றுவிப்பாளராக நியமித்ததாகவும், அவர் பின்னர் 'ரெட்பேர்ட் ஏவியேஷன் அகாடமி'யில் மாதத்திற்கு சுமார் ரூ.6.5 லட்சம் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் 7ம் தேதியன்று பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, நேற்று முன்தினம்தான் இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.