

ஜார்க்கண்டில் செயல்பட்டு வரும் ஒரு தேசிய வங்கியில், பகல் நேரத்தில் முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள், வங்கியில் இருந்த ரூபாய் 33.62 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரின் மஸ்ஜித் சாலை பகுதியில், கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காலை 09:15 மணியளவில் முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் உள்ளே புகுந்துள்ளனர்.
அப்போது இவர்களை வங்கியின் காவலர் தாக்க முயன்ற போது, அந்த மர்ம கும்பல் அவரை தாக்கி பிணைக் கைதியாக பிடித்துள்ளது. இதையடுத்து உள்ளே சென்ற கும்பல், வங்கி ஊழியர்களின் கை மற்றும் கால்களை டேப்பால் சுற்றி, வாயையும் மூடியுள்ளது.
இதையடுத்து அந்த கும்பல், வங்கி மேலாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி, பாதுகாப்பு அறையின் சாவியை பெற்றுள்ளனர்.
பின்னர் அங்கு இருந்த சுமார் 650 லாக்கரையும் திறந்து, சுமார் 33.62 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் சுமார் 23.80 கிலோ தங்க கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் இதன் மதிப்பு சுமார் 33.20 கோடி ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கியில் இருந்த 42 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்தை சுமார் 1 மணி நேரத்திற்குள் அரங்கேற்றி விட்டு, தாங்கள் வந்த பைக்குகளில் கொள்ளையர்கள் வெவ்வேறு வழிகளில் தப்பி சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கொள்ளை சம்பவம் குறித்து கோல்முரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொள்ளையடிக்கப்பட்ட வங்கிக்கு, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.