

கேரளத்தில், தந்தை டிரைவர், தாய் கண்டக்டர் பணியாற்றும் பஸ்சில், விடுமுறை நாட்களில் பயணிக்கும் மனுவின் குழந்தைகள், பஸ்சின் இருக்கைகளில் அமர்ந்து பாடங்களை படித்து, பஸ்சை வகுப்பறையாக மாற்றியுள்ளனர். பெற்றோரின் கடின உழைப்பை கண்டு, கல்வியை முன்னிலைப்படுத்தும் குழந்தைகளின் முயற்சி பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டம் கடக்கல் பகுதியை சேர்ந்தவர் மனு. 20 ஆண்டுகளுக்கு மேலாக டிரைவராக பணியாற்றுகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காட்டில் டிப்பர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தபோது தீபிகா என்ற இளம்பெண் அறிமுகமானார்.
தீவிரமாக காதலித்த அவர்கள், தீபிகாவின் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு வினாயக் என்ற மகனும், வைஷ்ணவி என்ற மகளும் உள்ளனர். தொடக்கத்தில் டிப்பர் லாரி டிரைவராக இருந்த மனுவுக்கு, திருமணத்திற்கு பிறகு ஒரு தனியார் பஸ்சில் டிரைவர் வேலை கிடைத்தது.
அதே நேரத்தில் மனுவின் வாழ்க்கையில் அடுத்தடுத்து துன்பங்கள் வந்தபடி இருந்தது. அவரது தாய் கோமளகுமாரி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவட்டார். அவரது தந்தை பாலச்சந்திரன் உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டார். மனு கல்லீரல் நோயுடனும், அவரது மகன் வினாயக் ஆஸ்துமா நோயுடனும் போராடி வருகின்றனர்.
மனுவின் சம்பளத்தில் தான் அவரது மொத்த குடும்பமும் வாழ்ந்து வந்தது. வழக்கமான செலவுகளுக்கு மத்தியில், மருந்திற்கும் அதிகமாக செலவழிக்க வேண்டி இருக்கிறது. இதனால் மனுவின் குடும்ப நிதிச் சிக்கல்கள் அன்றாட செலவுகளையும் தாண்டி நீள்கிறது.
மனுவின் வருமானம் அன்றாட செலவுகளுக்கும், மருத்து செலவுகளுக்கு போதுமானதாக இல்லை. ஆகவே அவரது மனைவி தீபிகா, மனு டிரைவராக வேலை பார்த்த பஸ்சிலேயே கண்டக்டராக வேலைக்கு சேர்ந்தார். இருவரும் தினமும் சேர்ந்தே வேலைக்கு சென்று வருவார்கள். அவர்கள் ஆயூர்-கடக்கல் வழித்தடத்தில் இயங்கும் ஒரு தனியார் பஸ்சில் டிரைவர்-கண்டக்டராக வேலை பார்க்கின்றனர். வார நாட்களில் அவர்களது 2 பிள்ளைகளும் பள்ளிக்கு சென்று விடுவார்கள். ஆனால் விடுமுறை நாட்களில் அவர்களது குழந்தைகளை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை. இதனால் விடுமுறை நாட்களில் மூன்றாம் வகுப்பு படிக்கும் வினாயக், இரண்டாம் வகுப்பு படிக்கும் வைஷ்ணவி ஆகியோர் தங்களது பெற்றோர் வேலை பார்க்கும் பஸ்சிலையே பயணித்தபடியே இருக்கின்றனர்.
அவ்வாறு செல்லும் போது அவர்கள் இருவரும் தங்களது பாடப்புத்தகங்களையும் உடன் எடுத்துச் செல்கிறார்கள். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது, பயணிகளோடு பயணிகளாக பயணிக்கிறார்கள். பயணிகள் கூட்டம் இல்லாத போதும், நிறுத்தங்களில் பஸ் நிற்கும் இடைவேளை நேரத்திலும் பாடம் படிக்கிறார்கள்.
அது போன்ற நேரங்களில் பஸ்சின் இருக்கைகளில் அமர்ந்து வீட்டுப்பாடங்களை முடிக்கின்றனர். அவர்கள் தங்களது பெற்றோர் வேலை பார்க்கும் பஸ்சை வகுப்பறையாகவே மாற்றிவிட்டனர் என்று கூறும் அளவுக்கு அதிகநேரம் பாட புத்தகத்துடனே செலவிடுகின்றனர்.
பொதுவாக பஸ்சில் பயணிக்கும் போது சிறுவர்கள் வெளியே பார்த்துக் கொண்டு செல்லவே விரும்புவார்கள். ஆனால் சிறுவர்-சிறுமியான இந்த இரு குழந்தைகள் பஸ்சில் செல்லும் நேரத்தை பாடம் படிக்க செலவிடுவதை அந்த பஸ்சில் பயணிக்கக்கூடிய பயணிகள் பலரும் ஆச்சரித்துடன் பார்த்து செல்கிறார்கள்.