IT வேலையை உதறிவிட்டு காளான் விவசாயம் : மாதம் ரூ.10 லட்சம் சம்பாதிக்கும் பி.டெக் பட்டதாரி!

ஒரு நாளைக்குச் சுமார் 500 முதல் 600 கிலோ வரை காளான்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
Mushroom Farming
Published on

பொதுவாகப் பொறியியல் படிக்கும் இளைஞர்களின் இலக்கு ஒரு நல்ல ஐடி நிறுவனத்தில் சேர்ந்து கைநிறையச் சம்பாதிப்பதாகத் தான் இருக்கும்.

ஆனால், ஒடிசாவைச் சேர்ந்த விக்ரம்தேவ் மஹாபத்ரா என்ற இளைஞர், 14 ஆண்டுகால தனது வெற்றிகரமான கார்ப்பரேட் ஐடி வாழ்க்கையைத் துறந்து, சொந்த ஊரில் காளான் விவசாயம் செய்து மாதம் 10 லட்ச ரூபாய்க்கும் மேல் லாபம் ஈட்டி சாதனை படைத்து வருகிறார்.

14 ஆண்டுகால ஐடி வாழ்க்கை

ஒடிசாவின் நபரங்பூர் பகுதியைச் சேர்ந்த விக்ரம்தேவ், கடந்த 2012-ஆம் ஆண்டு பிஜு பட்நாயக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 'எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்' பிரிவில் பி.டெக் முடித்தார்.

படிப்பை முடித்தவுடன் ஐடி துறையில் கால்பதித்த அவர், அடுத்த 14 ஆண்டுகளில் மைண்ட்ட்ரீ, செரோல் டெக்னாலஜிஸ் மற்றும் எல்டிஐமைண்ட்ட்ரீ போன்ற இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் பல்வேறு உயர் பொறுப்புகளில் மிக வெற்றிகரமாகப் பணியாற்றினார்.

கார்ப்பரேட் டூ விவசாயம் எப்படி?

கார்ப்பரேட் வாழ்க்கையில் நல்ல வருமானம் கிடைத்தாலும், சொந்த ஊருக்குச் சென்று சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் விக்ரம்தேவிடம் இருந்தது.

ஒருகட்டத்தில் தனது ஐடி வேலையை ராஜினாமா செய்த அவர், தனது சொந்த ஊரான நபரங்பூருக்குத் திரும்பினார். அங்கு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வணிக வாய்ப்புகளை ஆராய்ந்தவர், காளான் வளர்ப்பைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார்.

அதன்படி, 'கங்கா பூமி மஷ்ரூம்ஸ்' என்ற வணிக ரீதியிலான காளான் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் மையத்தைத் தொடங்கினார்.

தினசரி 600 கிலோ உற்பத்தி; மாதம் 10 லட்சம் லாபம்!

நவீன தொழில்நுட்பங்களை விவசாயத்தில் புகுத்திய விக்ரம்தேவின் பண்ணை, தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இவரது பண்ணையில் ஒரு நாளைக்குச் சுமார் 500 முதல் 600 கிலோ வரை காளான்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இது ஒரு மாதத்திற்கு 15 முதல் 18 டன்கள் ஆகும். இங்கு விளையும் காளான்கள் ஒடிசா மாநிலத்தின் முக்கிய நகரங்களான பெர்ஹாம்பூர், புவனேசுவர் போன்ற பெரிய சந்தைகளுக்கு நேரடியாகக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

அனைத்துப் பராமரிப்பு மற்றும் இதர செலவுகளும் போக, இந்த காளான் பண்ணை மூலம் மட்டுமே இவருக்கு மாதம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் நிகர லாபம் கிடைக்கிறது.

24 கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு

விக்ரம்தேவ் தனக்கான வருமானத்தை உருவாக்கியதோடு நிறுத்திக்கொள்ளாமல், தனது பகுதியைச் சேர்ந்த 24 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளார். மிக முக்கியமாக, அவரது பண்ணையில் பணிபுரியும் 24 ஊழியர்களில் 18 பேர் பெண்கள்.

இதன் மூலம் கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்திற்கு அவர் வழிவகை செய்துள்ளார். பெருநகரங்களை நோக்கி வேலைக்காக ஓடாமல், சரியான திட்டமிடலும் சந்தை தேவையைப் புரிந்துகொள்ளும் திறனும் இருந்தால், நவீன விவசாயம் மூலம் சொந்த ஊரிலேயே மிகப்பெரிய தொழிலதிபராக மாற முடியும் என்பதற்கு விக்ரம்தேவ் மஹாபத்ராவின் இந்த பயணம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com