கணவர் வீட்டிற்கு 3 மணி நேரம் நடந்தே சென்ற மணப்பெண்: சாலை வசதி இல்லாமல் சிரமப்படும் கிராமவாசிகள்

உத்தரகாண்ட் மாநிலம் புல்ஹார் என்ற கிராமத்தில் ஷர்மிளா என்ற இளம்பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.
Uttarakhand Bride Walks 18 Km
Published on: 
Summary

உத்தரகாண்டில் திருமணமான இளம்பெண் ஒருவர், தனது திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டிற்கு செல்வதற்காக சரியான சாலை வசதி இல்லாத கரடு முரடான பாதையில் சுமார் 18 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற நிகழ்வு இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் புல்ஹார் என்ற கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஷர்மிளா என்ற இளம்பெண்ணுக்கு அனில் என்பவருடன் திருமணம் நடந்தது.

இவர் தனது திருமணத்திற்கு பிறகு கணவர் வீடு அமைந்துள்ள உண்டாவா என்ற கிராமத்திற்கு உறவினர்களுடன் சென்றார். அப்போது அந்த வழித்தடம் சரியான சாலை வசதி இல்லாமல் கரடு முரடாக இருந்தது.

இதன் காரணமாக மணப்பெண் மற்றும் உறவினர்கள் சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கிராமத்திற்கு நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டது.

அப்போது அவர்கள் தங்கள் கிராமத்தில் இருந்து உண்டாவா கிராமத்திற்கு சுமார் இரண்டரை மணி நேரம் நடந்து சென்றனர்.

இதையடுத்து சரியான சாலை வசதி இல்லாமல் சிரமப்படும் கிராமவாசிகளுக்கு முறையான சாலை வசதி ஏற்படுத்தி தருமாறு உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு மணப்பெண் ஷர்மிளா கோரிக்கை வைத்துள்ளார்.

உத்தரகாண்டில் உண்டாவா கிராமம் உள்ளிட்ட பல மலை கிராமங்களில் சரியான சாலை வசதி இல்லாததால், அத்தியாவசிய தேவைக்கு கிராம மக்கள் நடந்தே செல்கின்றனர்.

அந்த பகுதி கிராம மக்கள் அடிப்படை தேவையான மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும் மற்றும் கல்வி நிலையங்களுக்கு செல்வதற்கும் போதுமான சாலைவசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து திருமண கோலத்தில் இளம்பெண் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி பயனர்களிடம் கவனத்தை பெற்றுள்ளது.

இதுகுறித்து பயனர்கள் வெளியிட்டுள்ள பதிவில், சுதந்திரமடைந்து பல ஆண்டுகள் கடந்தும் சரியான சாலை வசதி இல்லாதது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் உத்தரகாண்டின் மலைப்பகுதிகளில் சாலைகள் இல்லாதது, நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்துவதாகவும் பயனர்கள் குறிப்பிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com