

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ஆடு, கன்றுக்குட்டி உள்ளிட்ட கால்நடைகளை கருஞ்சிறுத்தை கொன்று வந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாலை நேரத்தில் வெளியேற அச்சமடைந்தனர்.
கேரளம் மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கலஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கூடல், குளத்து மண், போத்துப்பாறை, கள்ளிப்பாறை, எலிக்கோடு, இருக்குழி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கருஞ்சிறுத்தை நடமாட்டம் அதிகரித்தது. குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ஆடு, கன்றுக்குட்டி உள்ளிட்ட கால்நடைகளை கருஞ்சிறுத்தை கொன்று வந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாலை நேரத்தில் வெளியேற அச்சமடைந்தனர்.
கருஞ்சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து குளத்துமண்-போத்துப்பாறை சாலை அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து இறையாக ஆட்டுக்குட்டியுடன் வனத்துறையினர் கூண்டு அமைத்தனர்.
இந்த நிலையில் இறை தேடிவந்த கருஞ்சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் கூண்டுடன் கருஞ்சிறுத்தையை வாகனத்தில்ஏற்றி கோன்னி சுற்றுலா மையத்திற்கு கொண்டு சென்றனர் அங்கு மருத்துவ பரிசோதனை மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பிறகு திருச்சூர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் விலங்கியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு, கருஞ்சிறுத்தையை பராமரிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.