

இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலப்பது குறித்த சர்ச்சை நிலவி வரும் நிலையில், ரேவா தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான ஜனார்தன் மிஸ்ரா மத்திய அரசின் எத்தனால் கொள்கையை ஆதரித்து கடுமையாக பேசினார். அப்போது அதை எதிர்ப்பவர்களிடம், "தூய பெட்ரோல் என்ன உங்கள் அப்பா வீட்டிலிருந்தா வருகிறது?" என்று அவர் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
ரேவாவில் இருந்து போபால் மற்றும் கொல்கத்தாவிற்கு புதிய விமான சேவைகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய மிஸ்ரா, இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 20 சதவீதத்தை மட்டுமே உற்பத்தி செய்வதாகவும், மீதமுள்ள 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
உலகளாவிய புவிசார் அரசியல் சூழலைச் சுட்டிக்காட்டிய எம்.பி. மிஸ்ரா, எண்ணெய் விநியோகத்திற்காக கப்பல்கள் சுமார் 18,000 கிலோமீட்டர்கள் கூடுதல் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்று கூறினார்.
"இத்தகைய சூழலில், பிரதமர் நரேந்திர மோடி பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பது பற்றிப் பேசும்போது, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்குகிறார்கள். எத்தனால் வேலை செய்யாது, தூய பெட்ரோல்தான் பயன்படும் என்று ஒரு பிரச்சாரம் நடைபெறுகிறது. தூய பெட்ரோல் என்ன உங்கள் அப்பா வீட்டிலிருந்தா வருகிறது? நாட்டில் தூய பெட்ரோல் இல்லையென்றால், அது எங்கிருந்து வரும்?" என்று அவர் கேட்டார்.
இந்தியாவில் உள்ள வாகனங்கள் எத்தனால் கலப்பு எரிபொருளில் இயங்கக்கூடியவை என்றும், ஆனால் சிலர் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறுவதாகவும் மிஸ்ரா தெரிவித்தார்.
பெட்ரோலில் எத்தனால் கலப்பதை ஆதரித்துப் பேசிய அவர், பிரேசிலில் வாகனங்கள் 100 சதவீத எத்தனாலில் இயங்குவதாகவும், அங்கு வாகனங்களில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறினார்.
உலகிலேயே அதிக அளவில் எத்தனால் உற்பத்தி செய்யும் நாடாக பிரேசில் இருப்பதால், அங்குள்ள வாகனங்கள் 100 சதவீத எத்தனாலில் இயங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக அடிக்கடி செய்திகளில் இடம்பிடிக்கும் மிஸ்ரா, இந்தியாவிலும் நிபுணர்கள் எத்தனால் வாகன என்ஜின்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புவதாகவும், இருப்பினும் அதற்கு "தேவையற்ற" எதிர்ப்பு இருப்பதாகவும் கூறினார்.
இன்று உலகில் பணவீக்கம் மிக குறைவாகவும், வேலைவாய்ப்பு மிக அதிகமாகவும் உள்ள ஒரு இடம் இருந்தால், அது இந்தியாதான் என்றும் அவர் கூறினார்.