

நாடு முழுவதும் 80-வது சுதந்திர தினம் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருட சுதந்திர தினம் வந்தே மாதரம் பாடலுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும். பின்னர் கொடி ஏற்றிய பின் தேசிய கீதம் பாடல் பாடப்பட வேண்டும். இன்று டெல்லி செங்கோட்டையில் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டப் பிறகு பிரதமர் மோடி கொடி ஏற்றினார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
வந்தே மாதரம் பாடல் பாடியபோது, சோனியா காந்தி ஆட்சேபிக்கும் வகையில் செய்கை காட்டினார். அவர் வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திக்குப்பின் உள்ள பத்திகள் பாடப்படுவதை நிறுத்த முயன்றதாக பாஜக சார்பில் விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால், காங்கிரஸ் இதை மறுத்துள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவுக்காக நாற்காலி (Chair) கேட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான நிலைப்பாடு மற்றும் கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், வந்தே மாதரம்' பாடல் முழுமையாகப் பாடப்பட்ட முதல் சுதந்திர தினம் இதுவாகும்.
இருப்பினும் மிகவும் விசித்திரமான, முரண்பாடான மற்றும் துரதிர்ஷ்டவசமான ஒரு காட்சி அங்கு அரங்கேறியது. காங்கிரஸ் அலுவலகத்தில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டுக் கொண்டிருந்தபோது, அக்கட்சியின் உயர்மட்ட தலைவரான சோனியா காந்தி, சூப்பர்-தலைவர் ராகுல் காந்தி மற்றும் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்களுக்குள் பேசிக்கொண்டும், யாரையோ விசித்திரமான மற்றும் ஆட்சேபனைக்குரிய, மரியாதையற்ற விதத்தில் சைகை செய்து அழைத்துக் கொண்டும் இருந்தனர்.
காங்கிரஸ் கட்சியால் வந்தே மாதரம் என்ற தேசியப் பாடலை ஒருவேளை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையே இது உணர்த்துகிறது.
இவ்வாறு பாஜக எம்.பி. விமர்சித்துள்ளார்.
வந்தே மாதரம் பாடலின் ஆரம்பப் பகுதிகள் பாடப்பட்ட நிலையில், சோனியா காந்தி சற்றே பதற்றமடைந்து, அப்பாடலை முழுமையாக இசைப்பதற்குப் பதிலாக அதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். ராகுல் காந்தியும் அப்பாடலை முடித்துவிடுமாறு சைகை செய்வது போல் காணப்பட்டார். இருப்பினும், அப்பாடலைத் தொடர்ந்து இசைக்குமாறு அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இதிலுள்ள செய்தி தெளிவாக இருந்தது. அது, புதிய சட்டக் கட்டமைப்பின் கீழ் தேசியப் பாடலை முழுமையாக மதித்து நடக்க வேண்டும். வேண்டுமென்றே அதற்குத் தடையையோ அல்லது இடையூறையோ ஏற்படுத்தினால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
இறுதியில் அவர்கள் இணங்கி வந்தனர். வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்பட்டது. கலாசார ரீதியாகத் தன்னம்பிக்கை கொண்ட, நாகரிக வேர்களை ஆழமாகக் கொண்ட ஒரு இந்தியாவைக் குறித்த கருத்தாக்கத்துடன், காந்தி குடும்பத்தினரும் காங்கிரஸ் கட்சியினரும் பல தசாப்தங்களாக ஒருவித சங்கடமான உறவையே கொண்டிருந்துள்ளனர். வேடிக்கை என்னவென்றால், சுதந்திர தினத்தன்று அந்தச் சங்கடமான நிலை வெளிப்படையாகத் தெரிந்தது.
இவ்வாறு அமித் மால்வியா தெரிவித்தார்.
1875-ஆம் ஆண்டில் பங்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்ட வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே 1937-ல் தேசியப் பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்து பெண் தெய்வங்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருந்த மற்ற நான்கு பத்திகள் இதில் சேர்க்கப்படவில்லை. இதற்கு சில பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து அந்த வரிகளை பாடாமல் புறக்கணித்து வந்தனர்.
இதற்கிடையே பொதுக் கூட்டங்கள், பள்ளிகள் மற்றும் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இடங்களில் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும், வந்தே மாதரம் பாடலைப் பாடுவதை வேண்டுமென்றே தடுத்தாலோ, இடையூறு செய்தாலோ அல்லது பாடுவதைத் தடுத்தாலோ அது குற்றச்செயல் என்று அறிவிக்கும் மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.