

பாட்னாவில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தின் போது எஸ்யூவி காரின் சன்ரூஃப் வழியே நின்று கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர், தனது ஓட்டுநரைத் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனந்த் சிங், தனது மகளின் திருமணக் கொண்டாட்டங்களின் போது ஓட்டுநரை எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'சோட்டே சர்க்கார்' என்று அழைக்கப்படும் அனந்த் சிங், பாட்னா மாவட்டத்தில் உள்ள நட்வான் கிராமத்தில் நடைபெற்ற தனது மகள் ஷிவாங்கி சிங் மற்றும் ரிஷிகேஷ் குமார் ஆகியோரின் திருமண விழாவில் பங்கேற்ற போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நவம்பர் 25-ஆம் தேதி நடைபெற்ற இந்தத் திருமண விழாவின் போது, அனந்த் சிங் நகர்ந்து கொண்டிருந்த எஸ்யூவி காரின் சன்ரூஃப் வழியே எழுந்து நின்று, காரைச் சூழ்ந்திருந்த விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களை நோக்கி கையசைத்து வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரெனக் கீழே குனிந்த அவர், காரை ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநரைத் தனது துண்டால் (கம்சா) அடித்ததுடன், கால்களால் எட்டி உதைக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
ஓட்டுநரைத் தாக்கிய பிறகும் எதுவும் நடக்காதது போல் அவர் தொடர்ந்து கூட்டத்தினரைப் பார்த்து வாழ்த்துத் தெரிவிப்பதும் வீடியோவில் தெரிகிறது.
நவம்பர் 26-ஆம் தேதி இணையத்தில் வெளியான இந்த வீடியோவைப் பார்த்த பலரும், மக்கள் பிரதிநிதியான ஒருவரின் இத்தகைய செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கான சரியான காரணம் என்ன என்பதோ அல்லது ஓட்டுநருக்குக் காயம் ஏற்பட்டதா என்பதோ இன்னும் உறுதி செய்யப்படவில்லை. முன்னதாக இதே திருமண விழாவில் அனந்த் சிங் நாற்காலியில் அமர்ந்திருக்க, இரண்டு நபர்கள் கீழே குனிந்து அவரது காலணிகளில் படிந்திருந்த சேற்றைத் துடைத்துவிடும் வீடியோவும் வெளியாகி விமர்சனங்களைச் சந்தித்தது. தற்போது ஓட்டுநரை எட்டி உதைக்கும் வீடியோவும் வெளியாகியிருப்பதால், அரசியல்வாதிகளின் அதிகாரத் தோரணை மற்றும் வி.ஐ.பி கலாச்சாரம் குறித்து சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதங்கள் எழுந்துள்ளன.