

பீகார் அரசு மருத்துவமனையில் முறிந்த காலிற்கு பிளாஸ்டருக்குப் பதிலாக அட்டைப் பெட்டி வைத்துக் கட்டுப் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் நவ்கோதி காவல் எல்லைக்குட்பட்ட மகேஷ்வரா கிராமத்தைச் சேர்ந்த குணால் குமார் என்பவர், ஆகஸ்ட் 3 மாலை நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்தார்.
அவரது கால் முறிந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மஞ்சவுல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனை ஊழியர்கள் அவரது முறிந்த காலின் இருபுறமும் மருந்துப் பொட்டலங்களை வைக்க பயன்படுத்தப்படும் அட்டைப் பெட்டித் துண்டுகளை வைத்து, கயிறு மற்றும் பேண்டேஜ் துணியால் இறுக்கமாகக் கட்டினர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை பெகுசராய் சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்துப் பேசிய மருத்துவமனையின் பொறுப்பு அதிகாரி டாக்டர் அபினவ் பிரியதர்ஷி, ஊழியர்களின் நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளார்.
எலும்பு முறியும்போது அப்பகுதி அசையாமல் இருக்க வேண்டியது அவசியம் என்றும், அன்றைய தினம் மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரோ அல்லது பிளாஸ்டர் போடும் வசதியோ இல்லாததால், நோயாளிக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்கு அனுப்பவே அங்கு கிடைத்த அட்டைப் பெட்டியைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
பெகுசராய் சிவில் சர்ஜன் டாக்டர் அசோக் குமார் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
எந்தச் சூழலில் அட்டைப் பெட்டி பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து ஆராய்ந்து தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.