ரீல்ஸ் பார்த்ததால் நேர்ந்த கொடூரம்: காதல் மனைவியை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை!

மனைவியை கொன்ற குற்ற உணர்வில் ராகவேந்திராவும் தற்கொலை செய்துகொண்டார்.
MurderAndSuicide
Published on
Summary

செல்போனில் எந்நேரமும் ரீல்ஸ் வீடியோ பார்த்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், 15 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த காதல் மனைவியைப் பீர் பாட்டிலால் அடித்துக் கொன்றுவிட்டு, கணவனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

15 ஆண்டுக்கால காதல் வாழ்க்கை

கர்நாடக மாநிலம் பெங்களூரு எச்.ஏ.எல். காவல் எல்லைக்கு உட்பட்ட விபூதிபுரா பகுதியில் வசித்து வந்தவர் ராகவேந்திரா (38). ஆட்டோ ஓட்டுநரான இவரும், சுருதி (34) என்பவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் இருவரும் தாவணகெரேயில் உள்ள தங்களது பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வருகின்றனர். சுருதி விபூதிபுராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

கொலையில் முடிந்த ரீல்ஸ் விவகாரம்

ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கையில், சமீபகாலமாகப் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுருதி எந்நேரமும் தனது செல்போனில் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்ப்பதையும், அதில் மூழ்கிக் கிடப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி கடுமையான வாக்குவாதங்களும், குடும்பத் தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.

நள்ளிரவில் நடந்த கொடூரம்

வழக்கம்போல நேற்று முன்தினம் நள்ளிரவிலும் சுருதி செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்ததால், ராகவேந்திராவுக்கும் அவருக்கும் இடையே மீண்டும் கடுமையான தகராறு வெடித்தது. இதில் பெரும் ஆத்திரமடைந்த ராகவேந்திரா, சுருதியைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார்.

கோபத்தின் உச்சத்துக்கே சென்ற ராகவேந்திரா, வீட்டில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து சுருதியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சுருதி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

கணவன் தற்கொலை

ஆத்திரத்தில் தனது காதல் மனைவியைக் கொலை செய்துவிட்டதை உணர்ந்த ராகவேந்திரா, அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்தார்.

சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதாலும், குற்ற உணர்ச்சியாலும் அவரும் அதே வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

போலீசார் விசாரணை

அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், எச்.ஏ.எல். காவல் நிலைய போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர்.

முதற்கட்ட விசாரணையில், செல்போன் ரீல்ஸ் வீடியோ பார்ப்பது தொடர்பான தொடர் தகராறே இந்த இரட்டை மரணத்திற்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக வலைத்தள மோகத்தால் இரு உயிர்கள் பலியாகி, இரண்டு குழந்தைகள் அனாதையாக நின்றுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com