பெங்களூரு லாட்ஜில் வாக்குவாதம்: ஜன்னல் வழியாகத் தள்ளிவிடப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு- காதலன் கைது

இச்சம்பவம் குறித்து இளம்பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கங்கம்மனகுடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
 Bengaluru
Published on: 
Summary

பெங்களூருவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆண் நண்பர் தள்ளிவிட்டதில் ஜன்னல் வழியாகக் கீழே விழுந்த 23 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த இளைஞரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த இளம்பெண் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா (23) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சந்தோஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். முன்னதாக, ஐஸ்வர்யா தனது தோழி அருந்ததியின் ஆண் நண்பரான சச்சின் என்பவருடன் தனியார் விடுதி அறைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இத்தகவலைத் தோழி அருந்ததி, ஐஸ்வர்யாவின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் ஐஸ்வர்யாவைத் திட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரம் தெரிந்ததிலிருந்து காதலன் சந்தோஷும் ஐஸ்வர்யா மீது சந்தேகப்பட்டு, அவரை நம்பாமல் இருந்துள்ளார்.

மதுபோதையில் ஏற்பட்ட மோதல்

கடந்த நவம்பர் 19-ஆம் தேதி, ஐஸ்வர்யாவும் சந்தோஷும் பெங்களூரு கங்கம்மனகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு லாட்ஜிற்குச் சென்றுள்ளனர். அன்று மாலை இருவரும் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தனது குடும்பத்தினரும் சரி, காதலனான நீயும் சரி தன்னை நம்ப மறுப்பதாகக் கூறி ஐஸ்வர்யா மிகுந்த மன உளைச்சலுடன் பேசியுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஐஸ்வர்யா மிரட்டியுள்ளார்.

கொலை வழக்கு

இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், "நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்" என்று ஆவேசமாகக் கூறியதுடன், ஐஸ்வர்யாவைத் தனது கையால் ஓங்கித் தள்ளியுள்ளார். இதில் நிலைதடுமாறிய ஐஸ்வர்யா, அருகிலிருந்த விடுதி அறையின் ஜன்னல் வழியாகத் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ஐஸ்வர்யாவின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கங்கம்மனகுடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, சந்தோஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X