

பெங்களூருவில் அழகுசாதன பொருட்கள் விற்கும் கடை ஒன்றிற்கு வெளியே ‘கூச்சி’ என்ற ஆடம்பரமான மற்றும் உயர் தரமான பேஷன் ஆடைகளை தயாரிக்கும் உலக புகழ்பெற்ற இத்தாலிய நிறுவனத்தின் ஸ்வெட்டர் அணிந்து ஆடு ஒன்று படுத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரிது ஜூன் என்ற பயனர் பகிர்ந்த அந்த வீடியோவில், அழகுசாதனப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றிற்குள் நுழையும் காட்சிகள் உள்ளன. கடைக்கு வெளியே நுழைவாயிலில் ஒரு ஆடு அமர்ந்திருந்ததை கண்டு அவர் ஆச்சரியமடைந்தார்.
கேட்டில் கட்டப்பட்டிருந்த அந்த ஆடு, ‘கூச்சி’ பிராண்ட் ஸ்வெட்டரை அணிந்துகொண்டு மிகவும் வசதியாக அமர்ந்திருந்தது. கடைக்குள் செல்வதற்கு முன் ரிது அந்த ஆட்டைத் தடவிக் கொடுத்தார்.
இதுதொடர்பான அவரது பதிவில், சமீபத்தில் ஒரு அழகுசாதன பொருட்கள் கடைக்கு சென்றிருந்தபோது, நுழைவாயிலிலேயே ஒரு ஆட்டைக் கண்டேன். அங்கு ஆடு வைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை. இது வெறும் அலங்காரத்திற்காகவா அல்லது இதற்கு பின்னால் ஏதேனும் கதை உள்ளதா? யாருக்காவது தெரியுமா?" என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும், அந்த ஆடு ஏன் அங்கு நின்றது, அது வெறும் விளம்பரத்திற்காக அங்கு நிறுத்தப்பட்டதா அல்லது யாருடைய செல்லப் பிராணியா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.