

பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் மாக்சிம் ரிஷென்கோவ் அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ளார். இந்த பயணத்தின் போது, அவர் இந்தியா-பெலாரஸ் இடையே அரசுகளுக்கிடையிலான ஆணையத்தின் கூட்டத்திற்கு இணைத் தலைவராக இருந்து தலைமை தாங்குவார் என்று வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஞாயிற்றுக்கிழமை இரவு சமூக வலைதளமான எக்ஸ்-இல் இது குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில், "பெலாரஸ் குடியரசின் வெளியுறவு அமைச்சர் திரு. மாக்சிம் ரிஷென்கோவ் அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ளார்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பயணத்தின் போது, ரிஷென்கோவ், வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதாவுடன் இணைந்து ஆணையத்தின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்றும், வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.