

வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள் தலைமையில் நடந்த போராட்டம் இறுதியில் வன்முறையில் முடிந்தது.
இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட நவடிக்கையில் சுமார் 1400 பேர் வரை உயிரிழிந்ததாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.
இந்த ஒடுக்குமுறை போராட்டத்தில், பொதுமக்களுக்கு எதிராக ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தியது உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஹசீனாவிற்கு தண்டனை விதித்து சிறப்பு தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து வெளியேறி, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறுகையில், “எனக்கு எதிரான தீர்ப்பில் நீதி இல்லை. அது சட்டவிரோதமான அரசியலமைப்பிற்கு முரணான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.
அவாமி லீக்கை தலைமை பதவியில் இருந்து நீக்குவதற்காக, நீதித்துறை ஒரு அரசியல் பழிவாங்கும் கருவியாக மாற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற முயற்சிகள் முன்பும் மேற்கொள்ளப்பட்டன, அவை அப்போதும் தோல்வியடைந்தது, மீண்டும் தோல்வியடையும்.
நான் மரணத்திற்கு அஞ்சுவதில்லை. கடந்த 1975-இல் என் பெற்றோர்கள், சகோதரர்கள் மற்றும் என் குடும்பம் முழுவதையும் இழந்தேன்.
கடந்த ஆகஸ்ட் 21 அன்று கையெறி குண்டுகள் மூலம் என்னைக் கொல்ல ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனக்கு எதிராகப் தீட்டப்பட்ட ஒவ்வொரு சதி வலையையும் தகர்த்துக்கொண்டு, நான் வங்கதேச மக்களின் பக்கம் நின்றேன்.
மக்கள் வாக்கெடுப்பின் மூலம் ஐந்து முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்றினேன். என் வாழ்நாட்கள் வங்கதேச மக்களுடனும், அவாமி லீக்குடனும், ஜனநாயகப் போராட்டத்துடனும், வங்கதேசத்தின் வளர்ச்சியுடனும் பிணைக்கப்பட்டுள்ளது.
எனவே, நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். ஒவ்வொரு தடையையும், ஒவ்வொரு சதியையும் கடந்து, இந்த ஆண்டு என் நாட்டிற்கு திரும்புவேன்," என்று ஹசீனா கூறினார்.