அயோத்தி ராமர் கோவில் நன்கொடையில் கையாடல்?.. உ.பி.யில் வெடித்த சர்ச்சை - விசாரணை குழு அமைப்பு

இந்த விவகாரத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அயோத்தி ராமர் கோவில் யோகி ஆதித்யநாத்
அயோத்தி ராமர் கோவில், யோகி ஆதித்யநாத்
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இந்துத்துவா கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.1900 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டு 2024 ஜனவரியில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த கோவில் நிர்வாகத்தை அயோத்தி ஸ்ரீ ராமர் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கவனித்து வருகிறது.

மாயம்

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராமர் கோவிலுக்குப் பக்தர்கள் வழங்கிய பல கோடி ரூபாய் நன்கொடை பணம் கணக்கில் காட்டப்படாமல் மாயமாகியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

முன்னாள் பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் சிங், தனக்கு இந்த நிதி முறைகேடு குறித்துத் தெரியும் என கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேநேரம் மூத்த பாஜக தலைவர் ரஜனீஷ் சிங், கோவில் கணக்குவழக்கை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

யோகி ஆதித்யநாத்

இது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் இதுகுறித்து விசாரிக்க 3 அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழு 7 நாட்களில் முதற்கட்ட அறிக்கையையும், 15 நாட்களுக்குள் இறுதி அறிக்கையையும் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ள குழு, இந்த விவகாரத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அறக்கட்டளை மற்றும் கோவில் ஊழியர்களிடம் மேற்கொண்டு இக்குழு விசாரணை நடத்த உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com