அம்பானியை மிஞ்சிய பீகார் முன்னாள் எம்எல்ஏ... திருமண விழாவில் மஹிந்திரா தார் கார் பரிசு

வருங்கால மருமகன் ரிஷி கேஷ் குமாருக்கு சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற லேண்ட் ரோவர் டிபெண்டர் சொகுசு காரை அனந்த் சிங் பரிசளித்தார்.
அம்பானியை மிஞ்சிய பீகார் முன்னாள் எம்எல்ஏ... திருமண விழாவில் மஹிந்திரா தார் கார் பரிசு
Published on: 
Summary

பீகார் முன்னாள் எம்.எல்.ஏ. அனந்த் சிங் தனது மகளின் திருமணத்தை பிரம்மாண்ட திருவிழாவாக மாற்றியுள்ளார். ஜெய்ப்பூர் அரண்மனை பாணியில் மண்டபம், குதிரை பந்தயம், விருந்தினர்களுக்கு உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன.

திருமணம் என்பது ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியான நிகழ்வு என்ற நிலையை கடந்து, ஒரு ஊரே ஒன்றுகூடும் திருவிழாவாக மாறினால் எப்படி இருக்கும் என்பதற்கு பீகார் முன்னாள் எம்.எல்.ஏ. அனந்த் சிங் இல்ல திருமணம் சாட்சியாக அமைந்து உள்ளது. தனது இளைய மகள் ஷிவாங்கி சிங் திருமணத்தை, பல லட்சம் பேரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரம்மாண்ட திருவிழாவாக அவர் வடிவமைத்து உள்ளார்.

ஆடம்பரம்

அங்கித் என அழைக்கப்படும் ரிஷிகேஷ் குமாரை ஷிவாங்கி இன்று கரம்பிடிக்க உள்ளார். இதற்காக அனந்த் சிங்கின் பூர்வீக கிராமமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருவிழா கோலம் பூண்டுள்ளது. ஜெய்ப்பூர் அரண்மனை பாணியில் 10 முதல் 12 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மண்டபம், ஜெய்மாலா நிகழ்ச்சிக்கான தனி மேடை, சிறப்பு விருந்தினர்களுக்கான ஹெலிபேட் என ஏற்பாடுகள் களைகட்டி உள்ளன.

நடனம்

திருமண கொண்டாட்டங்கள் பாரம்பரிய சடங்குகளுடன் தொடங்கிய நிலையில், ஹல்தி விழாவில் சோட்டே சர்க்கார் என அழைக்கப்படும் அனந்த் சிங், ரங்பாஸ் ராஜா பாடலுக்கு தனது அடையாளமான மீசையை முறுக்கியபடி நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து பாட்னா தானாபூரில் உள்ள ரிசார்ட்டில் நடந்த திலக விழாவில், சுமார் 100 வாகனங்கள் அணிவகுத்து சென்றன. அந்த விழாவில் வருங்கால மருமகன் ரிஷி கேஷ் குமாருக்கு சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற லேண்ட் ரோவர் டிபெண்டர் சொகுசு காரை அனந்த் சிங் பரிசளித்தார். மேலும் 100 கிராம் தங்க சங்கிலி, 80 கிராம் தங்க கைக்காப்பு, வெள்ளி பொருட்களும் வழங்கப்பட்டன.

பந்தயம்

மணமகனுக்கு சொகுசு கார் வழங்கியது ஒருபுறம் இருக்க, திருமணத்திற்கு வரும் விருந்தினர்களையும் குதிரை பந்தய ஆர்வலர்களையும் உற்சாகப்படுத்த 12 ஏக்கர் பரப்பளவில் குதிரை பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் இந்த போட்டியில் முதலிடம் பிடிப்பவருக்கு புத்தம் புதிய மஹிந்திரா தார் கார், 2-வது இடம் பிடிப்பவருக்கு மோட்டார் சைக்கிள், 3-வது இடம் பிடிப்பவருக்கு ஸ்கூட்டர் பரிசாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கடந்த 22-ம் தேதிக்குள் 50-க்கும் மேற்பட்ட குதிரைகள் கிராமத்திற்கு வந்து சேர்ந்தன. லால் பாட்ஷா, ககாரியா எக்ஸ்பிரஸ், பாபர், ராக்கெட், சிக்கந்தர் உள்ளிட்ட குதிரைகள் தார் காரை தட்டி செல்ல மல்லுக்கட்ட உள்ளன.

விருந்து

இந்த பிரம்மாண்ட திருமணத்தில் சுமார் 5 லட்சம் விருந்தினர்களுக்கு உணவு பரிமாற திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயாராகின்றன. 500-க்கும் மேற்பட்ட ஹல்வாய்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் இரவு பகலாக 4 முதல் 5 பந்தல்களில் இனிப்பு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சமையலறை தேவைக்காக பால் டேங்கர்கள் மூலம் பால் கொண்டு வரப்படுகிறது. முன்னதாக நடந்த திலக விழாவிலும் தேசி நெய் லட்டு உள்ளிட்ட இனிப்புகள், பழங்கள் வழங்கப்பட்டன.

மழை

பிரம்மாண்ட ஏற்பாடுகளுக்கு மத்தியில் மழை ஒரு சவாலாக உருவெடுத்தது. மழையால் மைதானத்தில் தண்ணீர் தேங்கி சேறு குவிந்ததால் குதிரை பந்தய பாதையும், ஹெலிபேட்டும் சேதமடைந்தன. ஆனாலும் சளைக்காத ஏற்பாட்டாளர்கள், அனந்த் சிங்கின் நேரடி ஆய்வின் கீழ் ஜேசிபி எந்திரங்கள் மூலம் சேற்றை அகற்றி, கூடுதல் மண் கொட்டி சமன் செய்தனர். ஈரப்பதத்தை சமாளிக்க இரும்பு கம்பிகள் மூலம் பந்தல்களும் மேடைகளும் உயர்த்தப்பட்டு இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

அழைப்பு

விழாவில் பவன் சிங், அக்ஷரா சிங், குஞ்சன் சிங் உள்ளிட்ட போஜ்புரி திரை நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முறைப்படி அழைப்பிதழ் கிடைக்காத பொதுமக்களும் விழாவில் கலந்துகொண்டு விருந்து உண்ணலாம் என அனந்த் சிங் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பதால் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், அடிப்படை வசதிகளை உறுதி செய்யவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஒரு திருமணத்தை மாநிலமே திரும்பி பார்க்கும் வகையில் கொண்டாட்ட களமாக அனந்த் சிங் மாற்றியுள்ளார்.

X