சாதிக்க எதுவும் தடையில்லை: 45 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மாற்றுத்திறனாளி தாய்

சைகை மொழியை நன்கறிந்த நமன், தனது தாய்க்கு ஆசிரியராக மாறினார்.
Renu, Naman
Published on
Summary

சாதனைக்கு வயதோ, உடலோ எதுவும் தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் ஜம்முவைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி பெண்.

ஜம்முவைச் சேர்ந்த 45 வயதுடைய் பேசும் மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி பெண்மணி ஒருவர், தனது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 82 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஜம்முவின் ரூப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேணு ஹான்ஸ் (45). பேசும் மற்றும் கேட்கும் திறனற்றவர்.

கடந்த 2002-ம் ஆண்டு தனது 10-ம் வகுப்பு தேர்வை எழுதினார். எதிர்பாரா விதமாக கணிதத்தில் தோல்வி அடைந்தார். அதன்பின், திருமணம், குடும்பம், குழந்தைகள் என அவரது கல்விப் பயணம் முடங்கியது.

ஆனாலும், எப்படியாவது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் ஆழமாக இருந்தது.

தாய்க்கு ஆசிரியரான மகன்

ரேணுவின் கனவை நனவாக்க அவரது 12-ம் வகுப்பு படிக்கும் மகன் நமன் கவுல் முன்வந்தார். சைகை மொழியை நன்கறிந்த நமன், தனது தாய்க்கு தானே ஆசிரியராக மாறினார்.

மாலையில் பள்ளி முடிந்து வந்ததும், நமன் தனது தாய்க்கு பாடங்களை சைகை மொழி மூலம் பொறுமையுடன் கற்றுக் கொடுத்தார்.

கேட்கும் திறனற்ற ஒருவருக்கு கடினமான அறிவியல் மற்றும் கணிதக் கோட்பாடுகளைப் புரிய வைப்பது கடும் சவாலாக இருந்தது.

82 சதவீதத்துடன் தேர்ச்சி

ஜம்மு காஷ்மீர் திறந்தநிலைப் பள்ளி மூலம் கடந்த ஏப்ரல் மாதம் ரேணு ஹான்ஸ் தேர்வு எழுதினார். தேர்வு மையத்துக்குச் சென்ற ரேணுவுக்கு கொஞ்சம் டென்ஷனாகவே இருந்திருக்கிறது.

தன்னைவிட மிகவும் இளைய மாணவர்களும், வயதானவர்களும் அங்கு இருந்ததைப் பார்த்து முதலில் தயங்கினார். அவரது மகன் கொடுத்த ஊக்கத்தினால் தேர்வு எழுதினார்.

கடந்த 10-ம் தேதி அன்று வெளியான தேர்வு முடிவுகளில் அவர் 500-க்கு 410 மதிப்பெண்கள் (82 சதவீதம்) பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்.

கனவு நனவானது

இதுதொடர்பாக ரேணு ஹான்ஸ் கூறுகையில், இன்று என் கனவு நனவாகி உள்ளது. என் மகனால்தான் இவை அனைத்தும் சாத்தியமானது என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கேற்ப முறையான வழிகாட்டுதலும், தளராத நம்பிக்கையும் இருந்தால் மாற்றுத் திறனாளிகளாலும் எந்த சாதனையையும் படைக்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்த ரேணு ஹான்சுக்கு நாமும் ஒரு வாழ்த்து சொல்லலாமே.

X

Maalai Malar
www.maalaimalar.com