ரூ.2 கோடி சொத்து, நகை பறிமுதல்: டெல்லியில் 75 வயது முதியவரை 22 நாட்கள் 'டிஜிட்டல் கைது' செய்து பயங்கர மோசடி!

இந்த நெட்வொர்க் கம்போடியாவில் இயங்கும் சர்வதேச சைபர் குற்ற கும்பலுடன் தொடர்புடையது.
Digital Arrest
Published on: 
Summary

ஆன்லைன் மோசடிகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளோடு நின்றுவிடும் நிலையில், இந்த சம்பவத்தில் மோசடி கும்பலின் ஆட்கள் நேரடியாக முதியவரின் வீட்டுக்கே சென்று அச்சுறுத்தலை ஏற்படுத்தினர்.

டெல்லியில் உடல்நிலை குறைவால் சிகிச்சை பெற்றுவரும் 75 வயது முதியவரிடம், மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல வேடமிட்டு 22 நாட்கள் ஆன்லைன் மூலம் தீவிர கண்காணிப்பில் வைத்து, அவருடைய ரூ.2 கோடி மதிப்புள்ள வீடு, நகை மற்றும் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் மோசடி கும்பல் பறித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முதியவரின் தொலைபேசியை தொடர்புகொண்ட மர்ம நபர்கள், அவருடைய எண் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் சட்டவிரோத கும்பல்களுடன் தொடர்புடைதாக மிரட்டினர். தாங்கள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் என கூறிக்கொண்ட மோசடி கும்பல், அவரையும் அவரது பிள்ளைகளையும் கைது செய்யப்போவதாக பயமுறுத்தியது.

பின்னர், வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வழியாக காவல் சீருடை அணிந்த நபர்களைக் காண்பித்து, முதியவரைத் தனிமைப்படுத்தி 'டிஜிட்டல் கைது' செய்தனர். தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்கு என்பதால் இதை யாரிடமும் கூறக்கூடாது எனவும், 24 மணி நேரமும் வீடியோ அழைப்பில் இருக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தினர்.

பொதுவாக ஆன்லைன் மோசடிகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளோடு நின்றுவிடும் நிலையில், இந்த சம்பவத்தில் மோசடி கும்பலின் ஆட்கள் நேரடியாக முதியவரின் வீட்டுக்கே சென்று அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். முதியவரை வற்புறுத்தி அடகுக் கடைக்கு அழைத்துச் சென்று அவரது தங்க நகைகளை அடமானம் வைக்க வைத்துள்ளனர். அத்துடன் நிற்காமல், அவரது ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை கைப்பற்றி, வீட்டை குறைந்த விலைக்கு விற்க வைத்து, அந்தப் பணத்தையும் பல்வேறு போலி வங்கி கணக்குகளுக்கு மாற்ற வைத்துள்ளனர்.

நெதர்லாந்தில் வசிக்கும் முதியவரின் மகள், தனது தாயாருக்கு வீடியோ அழைப்பு செய்தபோது, தாயார் பதற்றத்துடன் ஒரு அறியாத நபரின் காரில் செல்வதைக் கண்டு சந்தேகமடைந்தார். உடனே காவல்துறையை அணுகுமாறு தாயாரிடம் கூறியதன் மூலமே இந்த பெரும் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து டெல்லி காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், இந்த நெட்வொர்க் கம்போடியாவில் இயங்கும் சர்வதேச சைபர் குற்ற கும்பலுடன் தொடர்புடையது என்றும், போலி வங்கிக் கணக்குகள் மூலம் பல லட்சம் ரூபாய்கள் கைமாறியுள்ளதும் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். மூத்த குடிமக்களை குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய 'டிஜிட்டல் கைது' குற்றங்கள் மிகவும் கொடூரமானவை என்றும், இத்தகைய சைபர் அச்சுறுத்தல்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றங்கள் மற்றும் காவல்துறை தீவிரமாக எச்சரித்து வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com