

ஹிமாஸ்ரீயின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதை இப்போதைக்கு முடிவு செய்ய முடியவில்லை. அவரது சாவில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.
அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்தவர் ஹிமாஸ்ரீ போரா (வயது23). கல்லூரியில் படித்து வந்த இவர் நடனங்களிலும் ஈடுபட்டு வந்தார். அங்குள்ள நடன குழுவினருடன் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார்.
ஹிமாஸ்ரீ கடந்த அக்டோபர் 6-ந்தேதி இரவு, விசாகப்பட்டினத்தில் இருந்து கவுகாத்தி செல்வதற்காக விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறியுள்ளார். அவருக்கு கல்லூரி தேர்வு இருந்ததால், டான்ஸ் குழுவில் இருந்த மற்றவர்களுக்கு முன்பாகவே, தனியாக புறப்பட்டார்
ஹிமாஸ்ரீ ரெயில் புறப்படுவதற்கு முன்பாகவே நிலையத்துக்கு போகவில்லை. அதனால் அவசர அவசரமாக ரெயிலை பிடித்தார்.
கடைசி நேரத்தில் பொது பெட்டியில் ஏறிவிட்டார். அந்த பெட்டியில் ஏற்கனவே கூட்டம் நிரம்பி வழிந்தது. தேர்வு எழுத வேண்டுமே என்பதற்காக, வேறு வழியில்லாமல் ஏறிவிட்டார். அப்போதுதான் தன்னை சுற்றிலும் நிறைய ஆண்கள் இருப்பதை கவனித்தார். ஹிமாஸ்ரீ ரெயிலில் ஏறிய பிறகு இரவு சுமார் 2 மணியளவில் தோழிக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பி யிருக்கிறார். தன்னைச் சுற்றி 100 ஆண்கள் இருப்பதாகவும், தனக்கு ரொம்ப பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல சீட் கிடைக்காமல், நின்றபடியே பயணித்து வருவதாகவும், அசவுகரியமாக உணர்வதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் ரெயில் பெட்டியின் உள்ளே இருந்த சூழலைக் காட்டும் வீடியோ அனுப்பியிருந்தார்.
அதன்பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆனது. குடும்பத்தினரும் நண்பர்களும் அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தனர். ரெயில்வே உதவி எண் 139-க்கும் புகாரும் தந்தனர்.
மறுநாள், அக்டோபர் 7-ந்தேதி, ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ரெயில் தண்டவாளம் அருகே ஹிமாஸ்ரீ பிணமாக மீட்கப்பட்டார். அவரை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
பிறகு ஹிமாஸ்ரீ பிரேத பரிசோதனையில் உடல் ரீதியான வன்முறை மற்றும் பாலியல் வன்முறைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், அதே நேரத்தில், இதை வைத்து ஹிமாஸ்ரீயின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதை இப்போதைக்கு முடிவு செய்ய முடியவில்லை. அவரது சாவில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.
ஹிமாஸ்ரீயின் குடும்பத்தினர் இந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் ரெயில்வே மந்திரிக்கு கடிதம் எழுதி, பாரபட்சமற்ற விசாரணை நடத்தக் கோரியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று அவரது உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.