எதிர்கால மோதல்களின் டிரெய்லர்களை இப்போது பார்க்கிறோம்: ராணுவ தளபதி நரவானே
புதுடெல்லி, :
இந்தியா ஒரு பக்கம் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் சீனா என பாதுகாப்பு சவால்களை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கி வருகிறது. இந்த தருணத்தில் டெல்லியில் ‘கிளாஸ்’ என்று அழைக்கப்படுகிற நிலப்போர் மையம், நேற்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவானே கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா ஒரு தனித்துவமான, கணிசமான, பல பிரதேச பாதுகாப்பு சவால்களை சந்தித்து வருகிறது.
வடக்கு எல்லைகளில் உள்ள முன்னேற்றங்கள், நமது நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கு நவீன தொழில்நுட்பத்துடன் களத்தில் தகுந்த கூறுகளுடன் படைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை அடிக்கோடிட்டு காட்டுகின்றன.
அணு ஆயுத திறன் கொண்ட அண்டை நாடுகளுடனான (சீனா, பாகிஸ்தான்) சர்ச்சைக்குரிய எல்லைகள் மற்றும் அரசால் ஊக்குவிக்கப்படுகிற மறைமுகப்போர், நமது பாதுகாப்பு எந்திரத்தையும், வளத்தையும் நீட்டிக்கிறது.
ராணுவம், தனது படைகளை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான செயல்முறை தொடங்கி விட்டது. முப்படைகளின் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கான முயற்சியில் ராணுவம் உறுதியாக உள்ளது.
எதிர்கால மோதல்களின் டிரெய்லர்களை நாங்கள் இப்போது பார்க்கிறோம். இவை தகவல் போர்க்களம் மற்றும் இணையவெளியில் தினசரி செயல்படுத்தப்படுகின்றன. அவை தீர்க்கப்பட்டாத, செயலில் உள்ள எல்லைகளிலும் ஆட்டம் போடுகின்றன.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், பினாமிகள் மற்றும் அரசு சார்பற்ற நபர்களை பயன்படுத்துவதில் மீண்டும் கவனத்தை திருப்பி உள்ளன.
இந்தியாவின் எதிரிகள், நமது நாட்டுக்கு எதிரான தங்கள் இலக்குகளை அடைவதற்கு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
2020-ம் ஆண்டின் நிகழ்வுகள், அனைத்து களங்களிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் பன்முகத்தன்மைக்கு சாட்சியமாக உள்ளன. மேலும் இது தொடர்பு இல்லாத, சாம்பல் மண்டல போரை நோக்கி கவனத்தை ஈர்த்துள்ளது. தொடர்பு இல்லாத மற்றும் தொடர்பு போர் முறைகளில் நாம் திறனை அதிகரிக்க வேண்டும்.
சம கால பாதுகாப்பு சவால்களுக்கு பண்டைய இந்திய ஞானம் மற்றும் அறிவை ஆராயும் ஒரு ஆய்வுத்திட்டத்தை ஆயுதப்படைகள் தொடங்கி உள்ளன. சில நாடுகள், உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்குமுறைக்கு சவால் விடுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

