

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களைப் பயன்படுத்தி, முதலீட்டுத் திட்டம் என்ற பெயரில் ரூ.30 லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த 59 வயதான தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் இந்த மோசடியில் சிக்கி 30 லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த மூன்று சைபர் குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் அமிதாப் பச்சன் மற்றும் நிர்மலா சீதாராமன் முதலீட்டு திட்டங்களைப் பரிந்துரைப்பது போன்ற போலி வீடியோக்களை மோசடி கும்பல் வெளியிட்டுள்ளது. அதிக லாபம் மற்றும் உறுதியான வருமானம் கிடைக்கும் எனவும் விளம்பரம் செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 21-ம் தேதி இந்த விளம்பரத்தைப் பார்த்த பாதிக்கப்பட்ட நபர், அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்க் மூலம் தனது விவரங்களைப் பதிவு செய்துள்ளார். பின்னர் அவரைத் தொடர்புகொண்ட மோசடி நபர்கள், அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி முதலீடு செய்ய தூண்டியுள்ளனர்.
முதலில் ரூ.9.54 லட்சம் செலுத்திய அவரிடம், முதலீட்டுக்கு 15,000 டாலர் போனஸ் கிடைத்துள்ளதாக கூறி மேலும் பணம் கேட்டுள்ளனர். இதை நம்பிய அவர் தனது நிலையான வைப்புத் தொகையை எடுத்து கூடுதலாக ரூ.20 லட்சம் செலுத்தியுள்ளார்.
மொத்தம் சுமார் ரூ. 30 லட்சத்தை இழந்த நிலையில், மோசடியாளர்கள் தொடர்பை துண்டித்துள்ளனர்.
இதையடுத்து ஜூன் 7-ம் தேதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் டெல்லியைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபலங்களின் வீடியோவில் முதலீட்டுத் திட்டம் விளம்பரப்படுத்தப்படுவதை மட்டும் நம்பி பணம் செலுத்த வேண்டாம். முதலீடு செய்வதற்கு முன்பு அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது அவசியம் என சைபர் கிரைம் போலீசார் எச்சிரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.