

காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே தனது அமெரிக்கக் கல்விச் செலவுகள் குறித்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போஸ்டன் பல்கலைக்கழகத்தின் உதவித்தொகை கடிதம் மற்றும் கல்விக்கடனை ஆதாரமாக வெளியிட்டுள்ளார்.
சூரத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட (RTI) ஆர்வலர் அமித் திவாரி என்பவர், அபிஜீத் திப்கேயின் தந்தை பகவான்ராவ் திப்கே மீது மகாராஷ்டிர அரசிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். மகாராஷ்டிர தொழில் வளர்ச்சி கழகத்தில் (MIDC) இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அவரது மாதச் சம்பளம் சுமார் ரூ.60,000 முதல் ரூ.65,000 வரை மட்டுமே இருந்த நிலையில், தனது மகனை எப்படி அமெரிக்காவில் உயர் கல்வி படிக்க வைக்க முடிந்தது என கேள்வி எழுப்பினார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மூத்த பத்திரிகையாளர் பார்கா தத்துடனான நேர்காணலில் விளக்கமளித்த அபிஜீத் திப்கே,"எனது அமெரிக்கப் படிப்பிற்கு குடும்பச் சொத்துகள் பயன்படுத்தப்படவில்லை. போஸ்டன் பல்கலைக்கழகம் வழங்கிய உதவித்தொகை மற்றும் நான் பெற்ற கல்விக்கடன் மூலமே எனது கல்வி செலவுகள் பூர்த்தி செய்யப்பட்டன.
இந்தக் கடனை நான் இன்னமும் திரும்பச் செலுத்த வேண்டி உள்ளது" எனது கல்வி உதவித்தொகை மற்றும் வங்கி கடன் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளிப்படையாக வெளியிட நான் தயார் என்று கூறி பல்கலைக்கழக சேர்க்கை மற்றும் உதவித்தொகை கடிதத்தையும் வெளியிட்டார்.
"நான் எனது கல்விச் சான்றிதழ்கள் மற்றும் கடன் ஆவணங்களைக் காட்டத் தயார். அதேபோல், நாட்டின் பேரரசராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியும் தனது கல்லூரி டிகிரி சான்றிதழைக் காட்டத் தயாரா?" என்று காட்டமாகச் சவால் விடுத்துள்ளார்.
CJP கட்சி பதிவு செய்யப்பட்ட அமைப்பா, இல்லையா என்பதை ஆய்வு செய்யக் கோரியும், கபில் சிபல் அறிவித்த நிதிக்கு ஜி.எஸ்.டி வரம்புகள் பொருந்துமா எனக் கோரியும் RTI ஆர்வலர் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளார். இதற்கிடையில், இந்த விவகாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், தனிநபரின் கல்விக் கட்டணத்தை சர்ச்சையாக்குவது தேவையற்றது என்றும் CJP கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைஷ்ணவி கவுர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் பிரம்மாண்ட மாணவர் போராட்டங்களை நடத்தி புகழ்பெற்றவர் அபிஜீத் திப்கே. CJP கட்சியின் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் போராட்டங்களுக்கான நிதியை, முழு வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களிடமிருந்தே திரட்டத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். CJP அமைப்பின் சட்டபூர்வ நிலை மற்றும் கபில் சிபல் அறிவித்த ரூ.1 கோடி வழக்கு நிதி உதவி குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய மறைமுக வரிகள் வாரியத்திடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.