

இந்தியாவின் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் ஆற்றிய மிகச் சிறந்த பங்களிப்பிற்காக, நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் 'அஜித் தோவல்' இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க 'லோக்மான்ய திலகர் தேசிய விருது' வழங்கப்படவுள்ளது. இந்த முக்கிய அறிவிப்பைத் திலக் ஸ்மாரக் டிரஸ்ட் தலைவரான டாக்டர் ரோஹித் திலக் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 1 (விடுதலைப் போராட்ட வீரர் லோக்மான்ய பால் கங்காதர திலகரின் 106-வது நினைவு நாள்) அன்று மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கடாரியா உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விருதை அஜித் தோவலுக்கு வழங்குகிறார். இதில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுனேத்ரா பவார் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பெருமை 81 வயதான அஜித் தோவலையே சேரும். 2014-ஆம் ஆண்டு முதல் இவர் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
இந்தியா-சீனா எல்லைப் பேச்சுவார்த்தைக்கான இந்தியாவின் சிறப்புப் பிரதிநிதியாகச் செயல்பட்ட தோவல், 2017-இல் இந்தியா-சீனா இடையே நிலவிய டோக்லாம் எல்லைப் பிரச்சனையை தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியான முறையில் தீர்ப்பதில் முக்கியப் பங்காற்றினார்.
1968-ஆம் ஆண்டு கேரளா கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர், உளவுத்துறையில் 3 தசாப்தங்களுக்கும் மேலாகப் பணியாற்றி அதன் இயக்குநராக ஓய்வு பெற்றார். மிசோரம், பஞ்சாப் (ஆபரேஷன் பிளாக் தண்டர்), சிக்கிம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற பதற்றமான பகுதிகளில் உளவுப் பணிகளையும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் திறம்பட கையாண்டுள்ளார்.
பாலகோட் வான்வழித் தாக்குதல், எல்லைத் தாண்டிய தாக்குதல்கள் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் போன்ற முக்கியமான பாதுகாப்பு வியூகங்களை வகுப்பதில் முதன்மை பங்காற்றியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் நினைவாக 1983-இல் திலக் ஸ்மாரக் டிரஸ்ட்டால் இந்த விருது தொடங்கப்பட்டது. நாட்டின் முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு அபார பங்களிப்பை அளித்த தலைவர்கள் மற்றும் ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி இது வழங்கப்படுகிறது.
சோசலிசத் தலைவர் 'எஸ்.எம். ஜோஷி'க்கு முதன்முதலில் இந்த விருது வழங்கப்பட்டது. இதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி (2023), முன்னாள் பிரதமர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய், மன்மோகன் சிங், இந்திரா காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மூத்த அரசியல்வாதி சரத் பவார் மற்றும் நிதின் கட்கரி (2025) போன்ற பல பிரபலங்கள் இவ்விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.