

வீர சக்ரா விருதாளர் குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான் தனியார் பயணிகள் விமானத்தின் விமானியாக இணைந்தார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி நாட்டிற்கே பெருமை சேர்த்த இந்திய விமானப்படையின் வீர சக்ரா விருதாளர் குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான், இந்திய விமானப்படைப் பணியில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தனியார் பயணிகள் விமான நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார்.
சுமார் 22 ஆண்டுகாலம் இந்திய விமானப்படையில் தீவிர சேவைக்கு பின், கடந்த மார்ச் மாதத்தில் ஓய்வு பெற்ற இவர், தற்போது கோவாவை தளமாகக் கொண்டு இயங்கும் 'FLY91' என்ற பிராந்திய பயணிகள் விமான நிறுவனத்தில் சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிப்ரவரி 2019-ல் நடைபெற்ற புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து மறுநாள் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியப் படை எதிர்த்துத் தாக்கியது.
அப்போது ஸ்ரீநகர் விமானப்படை தளத்திலிருந்து மிஃக்-21 பைசன் போர் விமானத்தில் புறப்பட்ட அப்போதைய விங் கமாண்டர் அபினந்தன் வர்த்தமான், தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி ராணுவ வரலாற்றில் புதிய சாதனை படைத்தார்.
இருப்பினும், இந்த வான்வழி மோதலின் போது இவரது விமானமும் எதிரி படையின் ஏவுகணையால் தாக்கப்பட்டு சேதமடைந்ததால், அபினந்தன் விமானத்தில் இருந்து அவசரமாக வெளியேறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்தார். அங்கிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்ட அவர், கடுமையான விசாரணைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நடுவிலும் காட்டிய மனவுறுதியும் தைரியமும் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் நெகிழ வைத்தது. இந்தியாவின் தீவிர அழுத்தத்தை அடுத்து சுமார் 60 மணி நேரத்திற்குப் பின் பாகிஸ்தான் அவரை தாயகம் திருப்பி அனுப்பியது.
தாயகம் திரும்பிய அவருக்கு, எதிரியின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் காட்டிய இணையற்ற வீரத்திற்காக இந்தியாவின் மூன்றாவது உயரிய போர் விருதான 'வீர சக்ரா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர், இந்திய விமானப்படை அவருக்கு 'குரூப் கேப்டன்' என்ற உயரிய பதவி உயர்வை அளித்தது.
விமானப்படையில் இருந்து முறைப்படி ஓய்வுபெற்ற 43 வயதான அபினந்தன், ஃப்ளை91 நிறுவனத்தின் ஏடிஆர் 72-600 (ATR 72-600) ரக பயணிகள் விமானங்களை இயக்குவதற்காக சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 2024 மார்ச் முதல் செயல்பட்டு வரும் இந்த தனியார் நிறுவனம், கோவா மற்றும் ஐதராபாத்தை முக்கிய மையங்களாகக் கொண்டு நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே விமான சேவைகளை வழங்கி வருகிறது. வான்வெளியில் நாட்டைக் காத்த நாயகன் தற்போது பயணிகள் விமானத்தின் மூலம் சிவிலியன் சேவையில் தடம் பதித்திருப்பது நாடு முழுவதிலும் உள்ள மக்களுக்குப் பெருமகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் வரவழைத்துள்ளது.