

சுமார் 2 ஏக்கர் பரப்பளவில், 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தை நெல்லூர் மாநகராட்சி சார்பில் ரூ.1.40 கோடி செலவில் கட்டி முடித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாநகராட்சி சார்பில் ஏ.சி. வசதியுடன் கூடிய சொகுசு திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் 24 மணி நேர வாடகை ரூ.1-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது திருமண மண்டபங்களின் வாடகை பல லட்சமாக உள்ளது. இடத்திற்குத் தகுந்தாற்போல் வெறும் 24 மணி நேரத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை வாடகை மட்டுமே கொடுக்க வேண்டியுள்ளது.
இதுதவிர மேடை, முகப்பு அலங்காரம், சமையல் பாத்திரங்களுக்கான தனி வாடகை என லட்சக்கணக்கில் செலவாகிறது. இத்தகைய மண்டபங்களில் திருமணம் செய்ய நடுத்தர வர்க்கத்தினரே அஞ்சும் நிலையில், ஏழைகளால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத சூழ்நிலை உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, நெல்லூர் மாநகராட்சியினர் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் பிள்ளைகளுக்கான திருமணச் செலவை வெகுவாகக் குறைக்க தீர்மானித்தனர்.
அதன்படி, நெல்லூரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில், 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தை நெல்லூர் மாநகராட்சி சார்பில் ரூ.1.40 கோடி செலவில் கட்டி முடித்துள்ளனர்.
திருமண மண்டபத்தில் ஏ.சி. அறைகள், பளிங்குத் தரைகள், பரந்த கார் பார்க்கிங் வசதி, குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த திருமண மண்டபத்திற்கு ஒரு நாள் வாடகையாக வெறும் 1 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமண மண்டபத்தை வருகிற செப்டம்பர் 16-ந்தேதி அமைச்சர் நாராயணா திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.