அமெரிக்காவிடம் இருந்து ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்து

'ஜாவலின் ஜாயிண்ட் வென்ச்சர்' இந்த ஏவுகணைகளை தயாரிக்கிறது.
ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை
ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை
Published on

அமெரிக்க தயாரிப்பான 'ஜாவலின்' பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை வாங்குவதற்காக அமெரிக்காவுடன் இந்திய ராணுவம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இந்த ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தற்போது கையெழுத்தாகியுள்ளது.

கருத்து

இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்புப் பங்களிப்பு மேலும் ஆழமாகவும் பலமாகவும் மாறுவதின் சான்றாகும் என்று இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்திற்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவின் ஆழத்தை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது என்றும், இரு நாடுகளின் பாதுகாப்பு தொழில் துறைக்கான புதிய வாய்ப்புகளை இது திறந்துவிடும் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிறப்பம்சங்கள்

சுமார் 45.7 மில்லியன் டாலர் மதிப்பிலானது இந்த ஜாவலின் ஏவுகணை ஒப்பந்தம். அமெரிக்க ராணுவம் தவிர பல சர்வதேச வாடிக்கையாளர்களாலும் ஜாவலின் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கவச வாகனங்கள் மற்றும் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அரண்களை தகர்க்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆர்டிஎக்ஸ் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியான 'ஜாவலின் ஜாயிண்ட் வென்ச்சர்' இந்த ஏவுகணைகளை தயாரிக்கிறது.

பாதுகாப்பு

கடந்த ஆண்டு இந்தியாவும் அமெரிக்காவும் தங்களின் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக 10 ஆண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன.

அமெரிக்க-இந்திய மூலோபாய உறவை வலுப்படுத்துவதற்கும், இந்தோ-பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டாளியின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என்று அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை சுட்டிக்காட்டியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com