

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா (JMI) பல்கலைக்கழகத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாணவர் சங்கத் தேர்தல் நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது
மாணவர்களின் தொடர் உண்ணாவிரதம் மற்றும் தீவிரப் போராட்டங்களை அடுத்து, அக்டோபர் 26, 2026 அன்று பல்கலைக்கழக நிர்வாகம் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டது.
கடந்த 20 ஆண்டுகளாக டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைகழகத்தில் மாணவர் சங்க தேர்தல் நடத்தப்படாததை கண்டித்து பல்கலைகழக வளாகத்திற்குள் மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாணவர்களில் தொடர் போராட்டத்திற்கு பிறகு பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர் சங்க தேர்தலை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
மாணவர் சங்கத்திற்கான அரசியலமைப்பு முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.இருப்பினும், இந்த அரசியலமைப்பு எப்போது இறுதி செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும் என்ற துல்லியமான தேதியை நிர்வாகம் இன்னும் அறிவிக்கவில்லை.
ஜாமியா பல்கலைக்கழகத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு மாணவர் சங்கம் கலைக்கப்பட்ட தேர்தலை மீண்டும் நடத்தக்கோரி தங்களின் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்கக் கோரி மாணவர்கள் அக்டோபர் 12 முதல் தொடர் உண்ணாவிரதம் மற்றும் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் போராட்டகளத்தில் இருந்து மாணவர்கள் வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டத்துடன் ,போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் பல்கலைகழக நிர்வாகம் ஈடுபட்டுருந்தது.
பல்கலைக்கழகப் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புகளை தற்காலிகமாக ஆன்லைன் முறைக்கு மாற்றியது. மேலும் வளாகத்திற்குள் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டதாகவும், நூலகங்கள் மூடப்பட்டதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
நிர்வாகத்தின் இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக, தங்களின் கோரிக்கைகளை இன்னும் வலுவாக வெளிப்படுத்தவே அக்டோபர் 25 அன்று இரவு மாணவர்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி, முழக்கங்களை எழுப்பியபடி பேரணி நடத்தினர்
தேர்தலை வலியுறுத்தி போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சஸ்பெண்ட் (இடைநீக்கம்) உத்தரவுகள் மற்றும் விளக்கக் குறிப்பு நோட்டீஸ்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஊழியர்கள் மீது விசாரணை: போராட்டத்தின் போது பல்கலைக்கழக பாதுகாப்புப் படையினர் மாணவர்களிடம் நடந்துகொண்ட விதம் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நிர்வாகம் தேர்தலுக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்த போதிலும், தேர்தல் நடத்துவதற்கான உறுதியான இறுதித் தேதி அறிவிக்கப்படாததாலும், தலைமைப் புரோக்டர் ராஜினாமா போன்ற மற்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததாலும் மாணவர்கள் இன்னும் தங்களின் போராட்ட முழுமையாகக் கைவிடாமல் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும், பல்கலைக்கழக முதன்மை பிராக்டர் ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட தங்களின் மற்ற கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஒரு தரப்பு மாணவர்கள் அறிவித்துள்ளனர்.