இனி அரசு ஆவணங்களில் ‘தத்தெடுக்கப்பட்டவர்’ எனக் குறிப்பிடக்கூடாது - கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

பிறப்பால் வந்தாலும் சரி, தத்தெடுப்பால் வந்தாலும் சரி, மகள் என்பவள் மகள்தான்.
இனி அரசு ஆவணங்களில் ‘தத்தெடுக்கப்பட்டவர்’ எனக் குறிப்பிடக்கூடாது - கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
Published on: 

வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்களில் ‘தத்தெடுக்கப்பட்ட மகன்’ அல்லது ‘தத்தெடுக்கப்பட்ட மகள்’ என்று குறிப்பிடுவதை நிறுத்தவேண்டும் என கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘பிறப்பால் வந்தாலும் சரி, தத்தெடுப்பால் வந்தாலும் சரி, மகள் என்பவள் மகள்தான்’ என்றும், அவர்களை பெற்றப் பிள்ளைகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்றும் வழக்கு விசாரணை ஒன்றில் தெரிவித்துள்ளது.

கேரள அரசின் இ-மாவட்ட இணையதளத்திலிருந்து தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான தனிப் பிரிவை நீக்குமாறும், சட்டப்பூர்வ வாரிசுரிமைச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை மாற்றுமாறும் நீதிபதி பி.வி. குஞ்சிகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

வழக்கின் பின்னணி

திருச்சூரைச் சேர்ந்த ‘அன்மோல்’ (நீதிமன்றத்தால் மாற்றப்பட்ட பெயர்) என்ற பெண், 1990-ஆம் ஆண்டு பிறந்த ஒரு மாதத்திற்குள் தத்தெடுக்கப்பட்டார்.

இவரது ஆதார் அட்டை, பாஸ்புக், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் கல்விச் சான்றிதழ்கள் அனைத்திலும் இவர் தத்தெடுத்தவர்களின் மகள் என்றே குறிப்பிடப்பட்டிருந்தார்.

2023-ஆம் ஆண்டு இவரது தாயார் இறந்தபோது வழங்கப்பட்ட வாரிசு சான்றிதழிலும், கிராம அதிகாரி வழங்கிய குடும்ப உறுப்பினர் சான்றிதழிலும் இவர் ‘மகள்’ என்றே குறிப்பிடப்பட்டிருந்தார்.

தேவையற்ற சொல்

ஆனால், 2024 அக்டோபரில் அவளுடைய தந்தை இறந்த பிறகு திருச்சூர் வட்டாட்சியர் வழங்கிய வாரிசு சான்றிதழில் மட்டும் ‘தத்தெடுக்கப்பட்ட மகள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த ‘தத்து மகள்’ என்ற சொல் தேவையற்றது என்று, தன்னைத் தன் தந்தையின் மகள் என்று மட்டும் அடையாளம் காட்டும் ஒரு புதிய சான்றிதழை வழங்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தை நாடினார்.

அரசு வாதம்

தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் காண தங்களது இ-மாவட்ட இணையதளத்தில் ஒரு தனி வசதி இருப்பதாகவும், அதிகாரிகள் ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்றி வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி குஞ்சிகிருஷ்ணன், “இணையதளம் தத்தெடுக்கப்பட்ட குழந்தையை, தத்தெடுத்த பெற்றோரின் மகள் அல்லது மகன் என்று எந்த முன்னொட்டும் இல்லாமல் காட்டட்டும்”.

‘தத்தெடுக்கப்பட்ட மகன்’ அல்லது ‘தத்தெடுக்கப்பட்ட மகள்’ போன்ற சொற்களில் அவமதிக்கும் அம்சம் எதுவும் இல்லை என்றும், ஆனால் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் அத்தகைய விளக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து அன்மோலுக்கு வழங்கப்பட்ட சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்ட அவர், அவரை 'மகள்' என்று மட்டும் குறிப்பிட்டு ஒரு புதிய சான்றிதழை வழங்குமாறு திருச்சூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து இ- மாவட்ட இணையதளத்தில் இருந்து தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளைத் தனியாகக் குறிப்பிடும் அம்சத்தை நீக்கவும் கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

X