இந்தியாவை விட்டு வெளியேற நோட்டீஸ்: மும்பை உயர்நீதிமன்றத்தை நாடிய நடிகர் இம்ரான் கான்

ஞானேஷ் குமார் பதவி விலக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் இம்ரான் கலந்து கொண்டார்.
நடிகர் இம்ரான் கான்
நடிகர் இம்ரான் கான்
Published on: 

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக்கோரி கடந்த 10-ம் தேதி மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் இந்தி நடிகா் இம்ரான் கானும் கலந்து கொண்டாா். இம்ரான் கான், இந்தி நடிகா் அமீா் கானின் உறவினா் ஆவாா்.

இந்தியாவில் இருந்து வெளியேற உத்தரவு

பாஜக முன்னாள் எம்.பி. கீா்த்தி சோமையா உள்ளிட்டோா் அமெரிக்க குடிமகனான இம்ரான் கான் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினா். இந்தச் சூழ்நிலையில், நாட்டைவிட்டு வரும் 28-ம் தேதிக்குள் வெளியேறும்படி அவருக்கு வெளிநாட்டவர் பிராந்தியப் பதிவு அலுவலகம் (Foreigners Regional Registration Office) நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

உத்தரவுக்கு தடைவிதிக்கக்கோரி மனு

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "இம்ரான் கான் இந்திய குடிமகன் கிடையாது. அவா் வெளிநாட்டு குடியுரிமையை வைத்துள்ளாா். குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் சட்டத்தின்படி, இந்தியாவில் நடக்கும் அரசியல் போராட்டங்கள் அல்லது அரசியல் நடவடிக்கைகளில் வெளிநாட்டினா் ஈடுபடக் கூடாது. அதனால் அவா் நாட்டைவிட்டு 28-ம் தேதிக்குள் வெளியேறும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அந்த நோட்டீஸை அவா் பெற்றுக் கொண்டாா். இதையடுத்து, அவா் மீது நிா்வாக ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றனா்.

இந்த நிலையில் நோட்டீஸ்க்கு தடைவிதிக்க வேண்டும். மற்றும் ரத்து செய்ய வேண்டும் என்று இம்ரான் கான் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசரமாக வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விதியை மீறியது எப்படி?

மேலும், இம்ரான் கான் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் "அதிகாரிகள் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை குறிப்பிட தவறி விட்டனர். அல்லது அவர் ஒரு வெளிநாட்டு இந்தியக் குடிமகன் (OCI) அட்டைதாரர் என்ற அவரது தகுதியை கருத்தில் கொள்ள தவறிவிட்டனர்.

எந்த விதியை, எப்படி, எப்போது மீறினார் என்பதை அந்த அறிவிப்பு குறிப்பிடவில்லை. வெளிநாட்டுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் (FRRO) ஒரு அமெரிக்கக் குடிமகனாக மட்டுமே கருதியது. OCI அட்டைதாரராக அவருக்கு உள்ள வாழ்நாள் குடியிருப்பு உரிமைகளைப் புறக்கணித்துள்ளது.

முன் விசாரணை, விளக்கம் கோரும் அறிவிப்பு அல்லது செவிமடுப்பதற்கான வாய்ப்பு ஏதுமின்றி, நாட்டை விட்டு வெளியேற 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. போராட்ட இடம் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதி அல்ல. OCI அட்டைதாரர்கள் போராட்டங்களில் பங்கேற்கத் தடை செய்யப்படவில்லை" குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com