

இந்திய பாதுகாப்புத் துறை உற்பத்தியை மேம்படுத்தவும், வெளிநாட்டு இறக்குமதியைக் குறைத்து சுயசார்பை எட்டவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு உற்பத்தித் துறை 6-வது 'நேர்மறை உள்நாட்டுமயமாக்கல் பட்டியலை' அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய பட்டியலில் 405 உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ உபகரணங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.3,070 கோடி மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகள் உருவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த ஆறாவது பட்டியலில் 389 உபகரணங்கள் பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களுக்கும், 16 உபகரணங்கள் இந்திய கடலோரக் காவல்படைக்கும் உரியவை ஆகும். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போர்க்கப்பல்கள் மற்றும் கனரகப் போர் வாகனங்களுக்குத் தேவையான முக்கிய உதிரிப்பாகங்கள், துணை அமைப்புகள் மற்றும் மூலப்பொருட்கள் இதில் அடங்கும்.
அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர், லைட் யுட்டிலிட்டி ஹெலிகாப்டர், சுகோய் Su-30MKI, தேஜஸ் லைட் காம்பாட் ஏர்கிராப்ட் மற்றும் AL-31FP இன்ஜின் உதிரிப்பாகங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. தரைப்படை வாகனங்களான T-72, T-90 போர் டாங்கிகள் மற்றும் BMP-II காலாட்படை போர் வாகனங்களின் பாகங்களும் இதில் அடங்கும்.
மேலும் கான்ஹர்-எம், இன்வார், எம்.ஆர்.எஸ்.ஏ.எம் ஏவுகணை அமைப்புகள், அதிநவீன டேங்க் எதிர்ப்பு வெடிமருந்துகள், ராடார் அமைப்புகள், சோனார் உபகரணங்கள், ஃபயர் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சாதனங்கள் எனப் பல அதிநவீன அமைப்புகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பொருட்களும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தியாவில் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும். தயாரிப்பு வெற்றி அடைந்த பிறகு, அவை இந்தியத் தொழில் நிறுவனங்களிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்படும். இதற்கான முழு விவரங்களும், காலக்கெடுவும் 'ஸ்ரீஜன்' இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் புதுமைத் தொடக்க நிறுவனங்கள் 'Make' நடைமுறைகள் மூலம் பெருமளவில் பயன்பெறும்.
2020 ஆகஸ்ட் மாதம் ஸ்ரீஜன் இணையதளம் தொடங்கப்பட்டதிலிருந்து 33,000-க்கும் மேற்பட்ட ராணுவப் பொருட்கள் உள்நாட்டு உற்பத்திக்காக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை வெளியிடப்பட்ட முதல் 5 பட்டியல்கள் மூலம் 15,700-க்கும் மேற்பட்ட பொருட்கள் வெற்றிகரமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.9,000 கோடி மதிப்பிலான வெளிநாட்டு இறக்குமதி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்திய நிறுவனங்களுக்கு சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான கொள்முதல் ஆர்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் இந்திய பாதுகாப்பு உற்பத்திக் கட்டமைப்பை பலப்படுத்துவதோடு, உள்நாட்டு முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.