'காணாமல் போன' 5 பள்ளிகளை கண்டுபிடித்தால் ரூ. 1 லட்சம் பரிசு: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்

உண்மையில் அங்கு ஆசிரியர்களோ, குழந்தைகளோ அல்லது கட்டிடங்களோ இல்லை.
Sanjay Singh
Published on

உத்தர பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்க பள்ளிகள் U-DISE இணையதளத்தில் செயல்படுவதாக பட்டியலிடப்பட்டுள்ளன, ஆனால் அவற்றின் கட்டிடங்களையோ அல்லது அவை உண்மையில் இருப்பதற்கான ஆதாரத்தையோ களத்தில் காண முடியவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் (AAP) மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் தெரிவித்தார்.

லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிங், "ஜான்பூர் மாவட்டத்தில் ஐந்து தொடக்க பள்ளிகள் உள்ளன. அவை உண்மையில் களத்தில் இல்லை, ஆனால் அரசுப் பதிவுகளில் (UDISE) 'செயல்படுவதாக' காட்டப்படுகின்றன" என்று கூறினார்.

ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு:

வெளிப்படையான சவால் ஒன்றை விடுத்த அந்த ஆம் ஆத்மி எம்.பி., காணாமல் போனதாகக் கூறப்படும் இந்த ஐந்து பள்ளிகளில் ஏதேனும் ஒன்றை கண்டுபிடிப்பவருக்கு தனது சொந்த ஊதியத்தில் இருந்து ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

நகர கல்வி அதிகாரி ஒருவரின் கடிதத்தை மேற்கோள் காட்டி, அந்த ஐந்து பள்ளிகளையும் அவர் அடையாளம் காட்டினார்: தல்கர் டோலா தொடக்க பள்ளி, மிசிர்பூர் பெண்கள் தொடக்கப் பள்ளி, கடான் அர்சானி பள்ளி, உருது பஜார் தொடக்க பள்ளி மற்றும் பாக் ஹாஷிம் தொடக்க பள்ளி ஆகியவை அந்தப் பட்டியலில் அடங்கும். இவை அனைத்தும் அரசு இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன, ஆனால் பட்டியலிடப்பட்ட இடங்களில் அவை தற்போது இல்லை என்று கூறப்படுகிறது.

கட்டிடங்களே இல்லை:

"யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் கீழ், நன்கொடைகள், நிலம் மற்றும் சர்க்கரை ஆகியவை திருடப்பட்டதை தொடர்ந்து, இப்போது 'பள்ளி திருட்டு' என்ற புதிய முறை உருவாகியுள்ளது. இந்த பள்ளிகள் UDISE இணையதளத்தில் செயல்படுவதாக காட்டப்படுகின்றன. ஆனால் உண்மையில் அங்கு ஆசிரியர்களோ, குழந்தைகளோ அல்லது கட்டிடங்களோ இல்லை" என்று அவர் குற்றம் சாட்டினார்.

முன்பு பள்ளி கட்டிடங்கள் இருந்தும் அவை மோசமான நிலையில் இருந்ததையும், உள்ளே குப்பைகள் குவிந்து கிடந்ததையும், சமையலறை மற்றும் கழிப்பறைகள் சிதிலமடைந்த நிலையில் இருந்ததையும் தான் சுட்டிக்காட்டி இருந்ததை அவர் நினைவுபடுத்தினார்.

இந்த விவகாரம் குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும், இருப்பிடமே இல்லாத இந்த ஐந்து பள்ளிகள் ஏன் இன்னும் UDISE இணையதளத்தில் செயல்படுவதாக காட்டப்படுகின்றன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சிங் வலியுறுத்தினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com