

இந்திய கடற்படையின் முதல் உள்நாட்டுத் தயாரிப்பு பல்நோக்குக் கப்பலான ‘ஐஎன்எஸ் சமர்தக்’ நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்திய கடற்படையின் முதல் உள்நாட்டுத் தயாரிப்பு பல்நோக்குக் கப்பலான ‘ஐஎன்எஸ் சமர்தக்’ நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா கர்நாடக மாநிலம் கார்வாரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேசத்திற்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், 75 சதவீதத்துக்கும் அதிகமான உள்நாட்டுப் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் சமர்தக் கப்பல், இந்தியாவின் நவீன தொழிற்துறை, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் கப்பல் கட்டுமானத் திறன்களின் அசுர வளர்ச்சிக்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது என்றார்.
பாதுகாப்புத் துறையில் தற்சார்பு என்பது இனி வெறும் இலக்காக மட்டும் இல்லாமல், தற்போது நனவாகி வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், சத்ரபதி சிவாஜி மகாராஜின் கடற்படை மற்றும் இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் இந்தியாவின் செல்வாக்கை நிலைநாட்டிய சோழர்களின் வரலாற்றுச் சாதனைகளையும் அவர் இந்நிகழ்ச்சியில் நினைவுகூர்ந்தார்.
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கடற்கொள்ளைத் தடுப்பு நடவடிக்கைகள், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்பது, அவசர கால மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் கால நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் இந்தியக் கடற்படை ஆற்றிவரும் அரிய சேவைகளை அவர் பாராட்டினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உள்நாட்டுக் கப்பல் கட்டுமானத் திறனை மேம்படுத்த முழுமையாகப் பாடுபட்ட எல் அண்ட் டி நிறுவனம், கடற்படை வடிவமைப்பாளர்கள், உயர்தர அதிகாரிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கப்பல் கட்டும் தளப் பணியாளர்கள் மற்றும் அனைத்து விநியோக நிறுவனங்களுக்கும் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.