

கொல்கத்தாவில் நேற்று ஏற்பட்ட கூட்டநெரிசலில் ஏற்பட்ட துயரத்தை நேரில் கண்டவர்கள் விவரித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள சோர்பகன் சர்வஜனீன் துர்கா பூஜை பந்தலில் நேற்று மாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 19 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் அங்கு பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர்.
இரவு சுமார் 7.40 மணியளவில் மழை பெய்ததால் வெளியே நின்றிருந்தவர்கள் பந்தலுக்குள் முண்டியடித்து சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இந்த கூட்டநெரிசல் நிகழ்ந்ததாக முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சுயநினைவின்றி இருந்த பலர் இருசக்கர வாகனங்களில் மருத்துவமனைகளுக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டனர்.
நேற்று கூட்டநெரிசலின்போது பலர் மயக்கமடைந்தனர். அவர்கள் மீது மற்றவர்கள் ஏறிச் சென்றதால் இக்கட்டான சூழல் ஏற்பட்டது.
இந்த கூட்டநெரிசலில் சிக்கி உயிர்தப்பியவர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. பலர் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்த வருத்தத்தில் உள்ளனர். அவர்கள் தாங்கள் கூட்டநெரிசலின்போது எதிர்கொண்ட சூழலை விவரித்துள்ளனர்.
மேலும் இந்த கூட்டநெரிசலை நேரில் கண்டவர்களும் சம்பவத்தின்போது இருந்த அசாத்திய சூழல் குறித்து விவரித்துள்ளனர்.
இந்த கூட்டநெரிசலில் 25 வயது இளைஞர் சோனு பால் காயமின்றி தப்பித்தார். இருப்பினும், அவரது தாய் அவர் கண் முன்னே உயிரிழந்தார்.
குமோர்துலியைச் சேர்ந்த சோனு, தன் தாயாருடன் பூஜையைக் காண வந்திருந்தார்.
சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத சோனு பால், மழையிலிருந்து தப்பிக்க அரங்கத்தின் நுழைவாயில் அருகே கூடியிருந்த மக்கள் திடீரென உள்ளே நுழைய முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக ஊடகங்களிடம் கூறினார்.
"என் கண் முன்னே என் தாய் இறந்துவிட்டார். நானும் உயிரோடு இருந்திருக்கக் கூடாது," என்று அவர் தெரிவித்தார்.
"வெளியே மழை பெய்துகொண்டிருந்ததால் உள்ளே யாரும் வெளியே செல்ல விரும்பவில்லை. அதேநேரம் மழையிலிருந்து தப்பிப்பதற்காக, நுழைவாயிலுக்கு அருகே நின்றிருந்த மக்கள் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றனர்" என சோனு பால் கூறினார்.
கூட்டத்தின் அழுத்தம் அதிகரித்ததால், உள்ளே இருந்தவர்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். அப்போது தானும் கூட்டத்திற்கு அடியில் சிக்கிக்கொண்டதாக சோனு கூறினார்.
"நானும் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டேன். எப்படியோ தப்பித்து என் அம்மாவிடம் சென்றேன். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டிருந்தார்" என்றார் அவர்.
உயிரிழந்தவர்களின் உடல்களைப் பெற்றுச் செல்வதற்காக, இன்று காலை 10 மணிக்கு வருமாறு தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உணவினர்கள் தெரிவித்தனர்.
"சடலம் கிடைத்துவிடும். ஆனால் இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? காவல்துறையும் நிர்வாகமும் எங்கே இருந்தன?" என்று உயிரிழந்தவர்களில் ஒருவரின் உறவினரான சன்னி கேட்டார்.
குறுகலான சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது, மேலும் அங்கு விளக்கு வசதியும் இல்லை, பந்தலின் நுழைவாயிலும் வெளியேறும் வழியும் மிகவும் குறுகலாக இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
மழையின் காரணமாக மக்கள் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்றிருந்தனர். இதனிடையே மழையால் பந்தலின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பீதி ஏற்பட்டது எனவும் விவரித்தனர்.
நேரில் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர், விளக்கு வசதி இல்லாததால் 2 சிறு குழந்தைகள் கீழே விழுந்ததையும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பெரும் கூட்டம் அவர்கள் மீது விழுந்ததையும் விவரித்தார்.
சம்பவ இடத்தில் காவல்துறையினரோ அல்லது தன்னார்வலர்களோ இல்லை என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
உயிரிழந்தவர்கள்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 பிரதமரின் நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அதே நேரம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்கப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.
நேற்று மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதை பார்வையிட்டார். இன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார்.
இதனிடையே இந்த கூட்டநெரிசல் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உட்பட7 பேர் இதுவரை கொல்கத்தா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.