

பரஸ்பர சம்மதத்துடன் வயது வந்தோர் இருவர் இணைந்து வாழும் லிவ்-இன் உறவு திருமணத்திற்கு ஒப்பானது என்றும், பெற்றோர்களோ, உறவினர்களோ அவர்களின் முடிவில் தலையிடக் கூடாது என்றும், அவர்களுக்கு மிரட்டல் விடுக்கக்கூடாது எனவும் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெண்ணின் குடும்பத்தினரால் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி லிவ்-இன் உறவில் இருக்கும் இளம் ஜோடி பாதுகாப்புக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கி, வயது வந்தவர்கள் என்ற வகையில் அந்தத் தம்பதியினருக்கு, யாருடைய தலையீடும் இன்றி, தாங்கள் விரும்பும் துணையைத் தேர்ந்தெடுத்து அவருடன் வசிப்பதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு என கூறியுள்ளது.
“மனுதாரர்கள் தாங்களாகவே விரும்பி, பரஸ்பர சம்மதத்துடன் மற்றும் மிகுந்த பொறுப்புடன் சேர்ந்து வாழத் தேர்ந்தெடுத்துள்ளதால், அவர்களுடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என யாருக்கும், அவர்களின் இந்தத் தேர்வுக்கு எந்தத் தடையையும் ஏற்படுத்தவோ அல்லது அதில் தலையிடவோ உரிமையோ அதிகாரமோ இல்லை.
அதிலும் குறிப்பாக அவர்களின் உயிருக்கோ அல்லது சுதந்திரத்திற்கோ அச்சுறுத்தல் விடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை,” என்று நீதிமன்றம் கூறியது.
மனுதாரர்கள் சேர்ந்து வாழ்ந்தாலும், சட்டப்படி ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்ளவில்லை; ஆயினும், சம்மதம் தெரிவித்த வயது வந்தவர்கள் என்பதால், இது திருமணத்தைப் போன்றதே.” எனக் குறிப்பிட்டுள்ளது.