

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 611 அரசுப் பள்ளிகள் சொந்தக் கட்டடங்கள் இன்றி இயங்கி வருவதாக அம்மாநில அரசு சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் டீகா ராம் ஜூலி எழுப்பிய கேள்விக்கு, 2025-26ஆம் ஆண்டிற்கான UDISE தரவுகளின் அடிப்படையில் கல்வித் துறை இந்த அதிர்ச்சிப் பதிலளித்துள்ளது.
இளைஞர் மற்றும் குடிமக்கள் அமைப்பான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP), "ஸ்கூல் தீக் கரோ" (பள்ளிகளைச் சீரமைப்போம்) என்ற பிரசாரத்தின் கீழ் மாநிலம் தழுவிய கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ஜெய்ப்பூர் அருகே பகரூ பகுதியில், பழுதடைந்த பள்ளி கட்டடத்திற்குப் பதிலாக மாணவர்கள் மாட்டுக்கொட்டகையில் அமரவைக்கப்பட்டுப் பாடம் நடத்தப்படுவதாக எழுந்த புகாரை ஆய்வு செய்யச் சென்ற CJP குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் 38 பள்ளிகளும், ஜாலாவார் மாவட்டத்தின் அக்லேரா பகுதியில் அதிகபட்சமாக 23 பள்ளிகளும் கட்டடமின்றி இயங்குகின்றன. சொந்தக் கட்டடம் கொண்ட 64,484 பள்ளிகளில், 2,047 பள்ளிகளில் கழிப்பறைகளும் 1,049 பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியும் இல்லை. பான்ஸ்வாரா மாவட்டத்தில் அதிகபட்சமாக 188 பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை.
மாநிலத்தில் 3,768 அரசுப் பள்ளிக் கட்டடங்களும் 83,000-க்கும் மேற்பட்ட வகுப்பறைகளும் மிகவும் அபாயகரமான நிலையில் இருப்பதாகக் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், அரசிடம் முறையான திட்டமிடல் இல்லை எனக் குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலளித்த அரசு, பள்ளிகளைப் பராமரிக்க ரூ.550 கோடியும், புதிய கட்டடங்கள் கட்ட ரூ.450 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு நிதிகள் மூலம் ஆண்டுதோறும் ரூ.2,500 கோடி கல்வி உள்கட்டமைப்பிற்குப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தது.