ஒடிசாவில் தொடர் கனமழை: நிலச்சரிவு காரணமாக 6 ரெயில்கள் ரத்து

உள்ளூர் அதிகாரிகள் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற தொடங்கியுள்ளனர்.
East Coast Railway
Published on: 

ஒடிசா மாநிலத்தின் ராயகடா ரெயில்வே பிரிவில் உள்ள இரண்டு நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, ஆறு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக கிழக்கு கடற்கரை ரெயில்வே (ECoR) அறிவித்தது.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையை தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரத்து செய்யப்பட்ட ரெயில்கள்:

ரத்து செய்யப்பட்ட ரயில்களில் ரூர்கேலா-ஜகதல்பூர் எக்ஸ்பிரஸ், கிராண்டூல்-விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜகதல்பூர்-ரூர்கேலா எக்ஸ்பிரஸ் ஆகியவை அடங்கும் என்று ECoR கூறியது.

மாலிகூரா மற்றும் சத்தாரிபுட் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, வேறு சில ரயில்களின் பயணங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன அல்லது பாதியிலிருந்தே தொடங்கப்பட்டன என்றும் அது தெரிவித்தது.

கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள்:

கனமழையால் ஒடிசாவின் குறைந்தது 13 மாவட்டங்களில்- பாலசோர், பத்ராக், ஜாஜ்பூர், மயூர்பஞ்ச், கலாஹண்டி, கோராபுட், நபரங்பூர், மல்கங்கிரி, கியோஞ்சர், நயாகர், கந்தமால், போலங்கீர் மற்றும் ஜகத்சிங்பூர் - திடீர் வெள்ளம் மற்றும் நீர் தேங்கும் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, 13 மாவட்டங்களை பாதித்த கனமழையை தொடர்ந்து ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மூழ்கிய கஞ்சம் மற்றும் கோராபுட் பகுதிகளை முதல்வர் மோகன் சரண் மஜி வான்வழியாக ஆய்வு செய்தார்; அப்பகுதிகளில் உள்ளூர் அதிகாரிகள் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற தொடங்கியுள்ளனர்.

அமைச்சர் ஆய்வு:

வருவாய்த்துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி, மாநிலம் முழுவதும் நிலவும் மழைச் சூழல் மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்தார். அரசின் தகவலின்படி, சுமார் 37 வட்டாரங்களும் ஐந்து நகர்ப்புற பகுதிகளும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்திராவதி அணையின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து அதன் ஐந்து மதகுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அணையின் கீழ்மட்டப் பகுதிகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் திலீப் குமார் ரவுட் தெரிவித்தார்.

நபரங்பூர் மாவட்டத்தில் சராசரியாக 238 மி.மீ மழை பதிவானது; இதில் டெண்டுலிகுண்டி பகுதியில் அதிகபட்சமாக 395 மி.மீ மழை பெய்தது. கோராபுட் மாவட்டத்தில் சராசரியாக 189 மி.மீ மழை பதிவான நிலையில், போரிகும்மா பகுதியில் 307 மி.மீ மழை பெய்தது. அதேவேளையில், மல்கங்கிரி மாவட்டத்தில் சராசரியாக 147 மி.மீ மழை பதிவானது; அங்கு அதிகபட்சமாக 162 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com