உத்தரகாண்ட் சுரங்க விபத்து: 6 பேர் உயிரிழப்பு

மூத்த அதிகாரிகளிடம் இருந்து நிகழ்நேர தகவல்களை பெற்று வருவதாகவும் தாமி கூறினார்.
Uttarakhand Tunnel
Published on

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் சுரங்கப்பாதைக்குள் தண்ணீரும் இடிபாடுகளும் புகுந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர். இரண்டு தொழிலாளர்கள் இன்னும் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்க மீட்பு குழுவினர் முயன்று வருவதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், சமோலியின் பிப்பல்கோட்டியில் உள்ள தெஹ்ரி நீர்மின் மேம்பாட்டு கழகத்தின் (THDC) திட்ட பகுதியில் மொத்தம் 22 பேர் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ​​திடீரென தண்ணீர் உள்ளே பாய்ந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

பலத்த நீரோட்டம் அவர்களில் பலரை சுரங்கப்பாதையின் வெளியேறும் வழியை நோக்கி அடித்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் 14 தொழிலாளர்கள் காயமடைந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள்:

"இது மிகவும் துயரமான சம்பவம்... முழு நிர்வாகக் குழுவும் எனது சக ஊழியர்கள் அனைவரும் வந்துவிட்டனர், மேலும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதே எங்களின் முன்னுரிமையாகும்," என்று உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் லாக்பத் புடோலா கூறினார்.

மாலை 6.30 மணியளவில், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த சுரங்கப்பாதைக்குள் கணிசமான அளவு இடிபாடுகளும் தண்ணீரும் புகுந்ததாக மாவட்ட ஆட்சியர் கௌரவ் குமார் தெரிவித்தார்.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். மூத்த அதிகாரிகளிடம் இருந்து நிகழ்நேர தகவல்களை பெற்று வருவதாகவும் தாமி கூறினார்.

தேடுதல் வேட்டை:

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த தொழிலாளர்களிடம் பேசினேன்; அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. மேலும், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களை சேர்ந்த, இந்த சம்பவத்தில் காயமடைந்த அல்லது சம்பந்தப்பட்டவர்கள் இங்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்த மாநில முதலமைச்சர்களுக்கும் தெரிவித்துள்ளேன். தலைமை மருத்துவ கண்காணிப்பாளரிடமும் பேசியுள்ளேன்," என்று முதலமைச்சர் கூறினார்.

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள், இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களைத் தேடுவதற்காக அவற்றைச் சல்லடை போட்டுத் தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கனமழை பெய்து வந்தது. திங்களன்று, ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் ஏற்பட்ட பலத்த நீரோட்டம், மாவட்டத்தின் நிதி பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த ஒரு பாலத்தை அடித்து சென்றது.

இந்த சம்பவத்தின் காணொளியில், சேறு கலந்த பெருமளவு நீர் கீழ்நோக்கி பாய்ந்து உலோக பாலத்தின் மீது மோதியது. சில நொடிகளில், நீரின் பெரும் சக்தியால் பாலம் வேரோடு பிடுங்கப்பட்டு ஆற்றங்கரையை நோக்கி தள்ளப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com