

மதுவிலக்குடன் இணைந்துள்ள 5 தீமைகளை உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, மகாராஷ்டிராவில் மெத்தனால் வாங்குவதற்கும் அதை விற்பதற்கும் கட்டுப்பாடுகளை விதிக்கும் மகாராஷ்டிர அரசின் விதிகளுக்கு எதிராக ரசாயன நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்தது.
மும்பையில் 1991 இல் கள்ளச்சாராயம் குடித்து 93 பேர் உயிரிழந்ததன் விளைவாக மகாராஷ்டிரா விஷப் பொருட்கள் விதி 18A, 18B கொண்டுவரப்பட்டது.
இந்த விதி மெத்தனால் வாங்குவதற்கும் நிறுவனங்களுக்கு விற்பதற்கும் பல கட்டுப்பாடுகளை விதித்தது. மெத்தனாலில் செயற்கை நிறமூட்டி உள்ளிட்டவற்றை சேர்த்த பின்னே மருந்து மற்றும் பிற நிறுவனங்களுக்கு விற்க வேண்டும் என்றும் அந்த விதியில் உள்ளது.
இதை எதிர்த்த மனுக்கள் மீதான விசாரணையில் அந்த விதிகளை ரத்து செய்த நீதிபதிகள், மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் வேறு வழிகளில் புரையோடியுள்ள அதனுடனிணைந்த தீமைகள் குறித்து பேசினர்.
மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தின் பாவ்நகரில் 13 பேர், மத்திய பிரதேசத்தின் சாகர் பகுதியில் 15 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதிகாரத்தில் இருப்பவர்கள் விழித்துக்கொண்டு செயல்பட வலியுறுத்தினர்.
"மது விலக்கோடு வருவாய் இழப்பு, தடையை அமல்படுத்துவதற்காக செலவிடப்படும் பணம், காவல்துறையில் ஊழல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் மற்ற போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் ஆகியவை இணைந்துள்ளன.
பூரண மதுவிலக்கு சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்றவற்றுக்கு அதிகம் வழிவகுப்பதற்கு பல உதாரணங்களும் உள்ளன. கடுமையான மதுவிலக்கு விதிகள் கொள்கையை கொண்டுள்ள குஜராத்தில் 10 பெரிய அளவிலான கள்ளச்சாராய மரண சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இவற்றில் 600 பேர் உயிரிழந்துள்ளனர்" என தெரிவித்தனர்.
இந்த வழக்கில், "மகாராஷ்டிர அரசின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், அரசின் மெத்தனால் குறித்த விதிகள் கள்ளசாராய மரணங்களை தடுத்துள்ளன என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.
அரசின் நோக்கம் மீது எங்களுக்கு சந்தேகமில்லை. ஆனால் ஆனால் நல்ல நோக்கம் மட்டுமே இவ்வாறான விதிகளை பொருத்தமுடையதாக்கிடாது.
இந்த விதிகள் மெத்தனால் பயன்பாட்டை ஊக்குவிப்பதை நிறுத்துகிறது என்றோ, அதன் வேதி தன்மையை மாற்றுவதன் மூலம் அது சட்டவிரோத மது தயாரிக்க பயன்படுத்த முடியாது என்பதையோ நிரூபிக்க அரசு தவறிவிட்டது.
அதுமட்டுமின்றி மெத்தனாலில் வேறு சில மூலங்களை சேர்ப்பதால் அது மரணத்தை தடுத்துவிடும் என்பதையும் அரசு நிரூபிக்கவில்லை.
சட்டவிரோத மது, மெத்தனால் அன்றி வேறு மூலங்களை வைத்து தயாரிக்கப்படுவதை தடுக்க அரசு தவறிவிட்டது" என தெரிவித்தனர்.