பெங்களூருவில் பப் மற்றும் ஹோட்டல்களில் அழுகிய, பூஞ்சைகள் சூழ்ந்த இறைச்சிகளால் அதிர்ந்து போன அதிகாரிகள்: பாய்ந்தது நடவடிக்கை

காலாவதியான பால் மற்றும் தயிர் பொருட்கள், அழுகிய கோழி மற்றும் மாட்டிறைச்சி, உட்பட 51 கிலோ உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டது.
Bengaluru Food Safety
பெங்களூரு மதுபான விடுதியில் 45 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல்
Published on

கர்நாடகாவில் உள்ள பகிர் நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அழுகிய மற்றும் பூஞ்சை பாதித்த இறைச்சிகள், காலாவதியான பால் பொருட்கள் மற்றும் முறையற்ற முறையில் சேமிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள ஒரு மதுபான விடுதி மூடப்பட்டு, மேலும் பல உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பெங்களுரில் யுபி சிட்டி ஆடம்பர வணிக வளாகத்தில் உள்ள மதுபான விடுதியில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது, சமையலறை சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்படுவது கண்டறியப்பட்டது.

மேலும் சமையலறையில் அழுகிய நிலையில் இருந்த கோழி மற்றும் மாட்டிறைச்சி கண்டெடுக்கப்பட்டு, அந்த இறைச்சியில் பூஞ்சை வளர்ந்திருந்தது கண்டறியப்பட்டது.

காலாவதியான உணவு பொருட்கள்

அப்போது சுமார் 10 நாட்கள் காலாவதி தேதி கடந்த பால் மற்றும் தயிர் பொருட்கள், 45 கிலோ அழுகிய கோழி மற்றும் மாட்டிறைச்சி, 6 கிலோ காய்கறிகள், கட்லெட்டுகள் உட்பட மொத்தம் 51 கிலோ உணவுப் பொருட்கள் உண்ணத் தகுதியற்றவை எனக் கண்டறியப்பட்டது.

மேலும் 15 லிட்டர் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யும் கண்டறியப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

முன்னதாக ராயல் செயின் ஹோட்டலில் அதிகாரிகள் 50 கிலோ வாத்துக்கறியையும் 5 கிலோ மீன்களையும் பறிமுதல் செய்தனர். மெட்ராஸ் கிச்சனில் 5 கிலோ பச்சை பட்டாணியும், டெஸ்கான் ஹோட்டலில் இருந்து 5 கிலோ காளான்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்செஸ் ஹோட்டலில் அதிகாரிகள் 3 கிலோ மீன்களைப் பறிமுதல் செய்ததோடு, கேக், உருளைக்கிழங்கு மற்றும் டாக்கோஸ் அடங்கிய மேலும் 7 கிலோ உணவுப் பொருட்களை அப்புறப்படுத்தினர்.

பெங்களூருவில் உள்ள பல புகழ்பெற்ற ஹோட்டல்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் கோல்ட்மேன் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ராதாகிருஷ்ணா ஃபுட்லேண்ட் நிறுவனங்களால் இயக்கப்படும் உணவு சேமிப்பு மற்றும் விநியோக மையங்களும் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆலைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்போது, காலாவதி தேதி நெருங்கிய சுமார் 70 கிலோ சோயா சாஸ் மற்றும் பல்வேறு இதர சாஸ்கள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

உணவு பாதுகாப்புத் துறை ஐந்து இறைச்சி மாதிரிகளையும், 13 இதர உணவு மாதிரிகளையும் சேகரித்து, அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

ஸ்ட்ராபெர்ரி சுவையுடைய பானங்கள் மற்றும் காலாவதி தேதி நெருங்கிய பிற பானங்கள் உட்பட, சுமார் 10 லிட்டர் குளிர்பானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை கூறுகையில், “சேமிப்பு நிலைமைகள், உணவு பொருட்களின் தரம் மற்றும் வளாகங்களில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர தேவைகளை மீறுவதாக கண்டறியப்பட்ட உணவு வணிக நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com