44 வயது ஆணை 'மிகவும் வயதானவர்' என 40 வயது பெண் நிராகரித்த விவகாரம்: இணையத்தில் வெடித்த விவாதம்!

ஆண்கள் தேடினால் விருப்பம், பெண்கள் தேடினால் பிடிவாதமா? இது என்ன நியாயம்?
Age Gap Debate
Published on

நவீன திருமணத் தேடல்களில் வயது என்பது ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கப்பட்டாலும், அதுவே தகுதியான வாழ்க்கைத்துணை அமைவதைத் தடுக்கும் முட்டுக் கட்டையாகவும் மாறிவிடுகிறது என்ற விவாதம் தற்போது இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

பிரபல மேட்ச்மேக்கரும் நிறுவனருமான ஓந்த்ரிலா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு உண்மைச் சம்பவம், நெட்டிசன்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் கலந்த பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மேட்ச்மேக்கர் பகிர்ந்த உண்மைச் சம்பவம்

தனது 6 ஆண்டுகால மேட்ச்மேக்கிங் அனுபவத்தை முன்வைத்து ஓந்த்ரிலா கபூர் பகிர்ந்துள்ளார்.

ஓந்த்ரிலாவிடம் வரன் தேடி வந்த 40 வயது பெண் ஒருவர் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் சம்பாதிக்கிறார். ஆனால், வரன் தேடும்போது வயது விஷியத்தில் மிகவும் பிடிவாதமாக உள்ளார்.

தனக்கு வரும் வரன் 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். அண்மையில் வந்த 44 வயது வரன் ஒருவரை, "அவர் மிகவும் வயதானவர்; எங்களுக்குள் தலைமுறை இடைவெளி இருக்கும்" எனக் கூறி நிராகரித்துள்ளார்.

திருமணச் சந்தையின் முரண்பாடு

இந்த பிடிவாதத்தில் உள்ள ஒரு முக்கிய முரண்பாட்டை ஓந்த்ரிலா சுட்டிக்காட்டியுள்ளார். 38 முதல் 42 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெரும்பாலும் 35 வயதிற்குட்பட்ட பெண்களையே தங்களுக்குத் துணையாகத் தேடுகிறார்கள்.

அதே நேரத்தில், 35 வயதிற்குட்பட்ட இளம்பெண்கள் தங்களை விட மிகவும் மூத்த வயதுடைய ஆண்களைத் திருமணம் செய்ய விரும்புவதில்லை.

இதனால், திருமணச் சந்தையில் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஒருவரை நோக்கி விரல் நீட்டுகிறார்கள், ஆனால் அவர்கள் தேடும் நபர் இவர்களைத் தேடுவதில்லை. இது ஒரு வட்டத்திற்குள் ஒருவரையொருவர் துரத்தும் முடிவற்ற கதையாக முடிகிறது.

வயது என்பது வாழ்க்கை முறை, ஆரோக்கியம், குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டமிடல் ஆகியவற்றிற்கு முக்கியமாக இருந்தாலும், இருவருக்கிடையேயான புரிதலுக்கு வயது மட்டுமே தகுதி கிடையாது என்று ஓந்த்ரிலா கூறுகிறார்.

இணையவாசிகள் கருத்து

இந்தப் பதிவு வெளியானதில் இருந்து சமூக வலைத்தளங்களில் விவாதம் இரு பிரிவாகப் பிரிந்துள்ளது.

பெண்களுக்கு ஆதரவான குரல்கள்:

"ஆண்கள் தங்களுக்கு வரன் தேடும்போது அதை 'விருப்பம்' என்கிறார்கள், ஆனால் பெண்கள் தங்களுக்குப் பிடித்ததைத் தேடினால் மட்டும் அதை 'பிடிவாதம்' என்று முத்திரை குத்துகிறார்கள். ஏன்?".

"பெண்கள் இப்போது பொருளாதார ரீதியாகத் தற்சார்பு அடைந்துவிட்டனர். தங்களுக்குப் பிடிக்காத ஒருவரைத் திருமணம் செய்து சமரசம் செய்துகொள்வதற்குப் பதிலாக, அவர்கள் வாழ்நாள் முழுக்க தனிமையாக வாழவே விரும்புகிறார்கள்.

இதில் எந்தத் தவறும் இல்லை" என்று பலர் ஆதரவளித்துள்ளனர்.

மாற்று கருத்துக்கள்:

"40 வயதிற்கு மேற்பட்ட பல பெண்கள் 35 வயதிற்குட்பட்ட பெண்களை விட மிகவும் ஃபிட்டாகவும் அழகாகவும் இருக்கிறார்கள். ஆண்கள் எப்போதுமே வெளிப்புறத் தோற்றத்திற்கே முக்கியத்துவம் தருகிறார்கள்", "வயது என்பது வெறும் வடிகட்டி அல்ல; அது ஒருவருடைய பாதுகாப்பிற்கான எல்லையா அல்லது வாய்ப்புகளைக் குறைக்கும் பிடிவாதமா என்பதைத் தேடுபவர்கள் சிந்திக்க வேண்டும்" எனப் பலதரப்பட்ட கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com