உலகப் புகழ்பெற்ற கேரளம் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 377 திருமணங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்பதிவுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால், இந்த எண்ணிக்கை 400-ஐத் தாண்டி புதிய உலக சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மலையாள மாதமான சிங்கத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இது கேரளாவின் மிக முக்கியமான சுபமுகூர்த்த நாளாக கருதப்படுகிறது.
இந்த 'சிங்கம்' மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 23-ஆம் தேதி வருகிறது. இந்நாளில் திருமணம் செய்ய இதுவரை 377-க்கும் மேற்பட்ட திருமணங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு திருமணங்களுக்கு மிகவும் உகந்த நாளாக இது கருதப்படுவதால், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான தம்பதிகள் குருவாயூரப்பனின் முன்னிலையில் தங்களின் திருமண வாழ்க்கையைத் தொடங்க போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு செய்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, அடுத்து ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் ஏற்கனவே 295 திருமணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
வழக்கத்திற்கு மாறாகக் குவியவிருக்கும் கூட்டத்தைச் சமாளிக்கவும், அனைத்து திருமணங்களையும் சரியான நேரத்தில் நடத்தி முடிக்கவும் குருவாயூர் தேவஸ்வம் போர்டு அசத்தலான அதிரடி ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
ஆகஸ்ட் 23 மற்றும் 30 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருமணச் சடங்குகள் வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே, அதாவது அதிகாலை 4 மணிக்கே தொடங்கப்படவுள்ளன.
திருமணங்களை தடையின்றி நடத்த கோவிலில் பிரத்யேகமாக 6 திருமண மண்டபங்கள் அமைக்கப்படவுள்ளன. கூடுதல் கோவில் பணியாளர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் கூடுதல் மங்களவாத்தியக் குழுக்கள் சிறப்புப் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தேவஸ்வம் போர்டு சில கண்டிப்பான விதிகளையும் விதித்துள்ளது. இதன்படி, திருமண மண்டபத்திற்கு அருகில் மணமகன் மற்றும் மணமகளுடன் சேர்த்து, புகைப்படக் கலைஞர்கள் உட்பட மொத்தம் 24 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த செப்டம்பர் 8, 2025 அன்று இக்கோயிலில் ஒரே நாளில் மட்டும் 334 திருமணங்கள் நடைபெற்றது தான் மிகப்பெரிய சாதனையாக இருந்தது.
ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடக்கவிருக்கும் திருமணங்கள் அந்தப் பழைய சாதனையை முறியடித்துள்ளது.
கோவில் தரிசனம் மற்றும் திருமணச் சடங்குகளைச் சுமூகமாக நடத்துவதற்குப் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு தேவஸ்வம் போர்டு தலைவர் ஏ.வி. கோபிநாத் கேட்டுக்கொண்டுள்ளார்.