பஞ்சாப்பில் நெகிழ்ச்சி: சான்றிதழ் சரிபார்ப்பில் 35 ஆண்டுக்கு பின் ஒன்றுசேர்ந்த அண்ணன்-தம்பி

காலத்தின் சுழற்சியிலும் வறுமையின் பிடியிலும் சிக்கி, 35 நீண்ட ஆண்டுகள் ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் பிரிந்திருந்த உடன்பிறப்புகள் 2 பேர், அரசுத் துறை ரீதியான ஒரு சிறிய சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்வின் மூலம் மீண்டும் இணைந்துள்ள உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
Haryana
Published on

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் சீதாராம். மாற்றுத்திறனாளியான இவர், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வாதாரம் தேடி ஹரியானாவில் உள்ள தனது சொந்த ஊரிலிருந்து பஞ்சாப்பிற்கு இடம்பெயர்ந்தார். அங்கு தீவிர முயற்சிக்குப் பிறகு, பஞ்சாப் மாநில அரசுப் பணியில் 'டி' பிரிவில் அவருக்கு வேலை கிடைத்தது. தமக்குக் கிடைத்த வேலையை சார்ந்து, பஞ்சாப்பிலேயே தங்கி தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் சீதாராம். ஆனால், காலப்போக்கில் சொந்த ஊரில் இருந்த குடும்பத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தம்பி எங்கு இருக்கிறார், உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற விபரம் தெரியாமல் அண்ணன் குடும்பமும், தங்களது அண்ணனை மீண்டும் காண்போமா என்ற ஏக்கத்தில் சீதாராமும் பல ஆண்டுகள் தவித்து வந்தனர்.

பள்ளி சான்றிதழ்

இந்த நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஆர்.ஜே.) நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வந்தது. இதற்காக தனது பழைய பள்ளி சான்றிதழ் தேவைப்பட்டதால், சீதாராம் சமீபத்தில் ஹரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான மனோகர்பூருக்கு பயணமானார். அங்குள்ள அரசு பள்ளிக்கு சென்று தனது சான்றிதழை கோரியபோது, பள்ளி ஊழியர்கள் பழைய ஆவணங்களை தீவிரமாக தேடினர். அப்போது, சீதாராமின் பழைய குடும்ப விவரங்கள் மற்றும் முகவரி தகவல்கள் ஆவணங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.

வாக்காளர் பதிவு

உடனடியாக செயல்பட்ட பள்ளி ஊழியர்கள், ஆவணத்தில் இருந்த தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி, சீதாராமின் மூத்த சகோதரரான கிருஷ்ணாவை தொடர்பு கொண்டனர். "உங்கள் தம்பி சீதாராம் இங்கு சான்றிதழ் வாங்க வந்திருக்கிறார்..." என்று அலைபேசியில் கேட்ட அந்த ஒரு வார்த்தை, அண்ணன் கிருஷ்ணாவை உறைய செய்தது. இத்தனை ஆண்டுகள் கழித்து தம்பி உயிரோடு இருக்கிறான் என்ற செய்தி, கிருஷ்ணா குடும்பத்தினரை ஆனந்தக் கண்ணீரில் மூழ்கடித்தது. தகவலறிந்த கிருஷ்ணா, சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக அங்குள்ள வாக்காளர் பதிவு அதிகாரியை தொடர்பு கொண்டார்.

வாக்காளர் பட்டியல்

செய்தி அறிந்த கிருஷ்ணாவின் மனைவி, குழந்தைகள் என அனைவரும் ஓடோடி வந்து, 35 ஆண்டுகளுக்கு பிறகு தம் கண்முன்னே நிற்கும் சீதாராமை கட்டித்தழுவி அழுது, தங்களது பாசத்தை பொழிந்தனர். இதனைத்தொடர்ந்து, சகோதரர்கள் இருவரும் ஒரே வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர். 35 வருட இடைவெளிக்கு பிறகு பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், தற்போது சமூக வலை தளங்களில் பரவி பலரையும் நெகிழச் செய்துள்ளது.

கூடுதல் உதவி தேர்தல் பதிவு அதிகாரி

இதுகுறித்து கூடுதல் உதவி தேர்தல் பதிவு அதிகாரி (ஏ.இ.ஆர்.ஓ.) டாக்டர் ரமேஷ் குமார் கூறுகையில், "தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கை, வெறும் அதிகாரப்பூர்வப் பணி மட்டுமல்ல; அது 35 ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓர் அண்ணன்-தம்பியை மீண்டும் இணைக்கும் பாசப் பாலமாகவும் மாறியுள்ளது. வாழ்க்கையில் திசைமாறிபோன ஒரு குடும்பத்தை மீண்டும் ஒன்று சேர்த்ததில் எங்கள் களப்பணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறோம்,"என்று உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com