

ஒடிசாவில் 'அர்னாப்' புயலால் பெய்த பலத்த மழையினால் மாநிலத்தின் தெற்கு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) நிகழ்ந்த நிலச்சரிவில் ஒன்பது மாத குழந்தை உட்பட குறைந்தது மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், ஒடிசாவில் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்றும் ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த புயல் கஞ்சாம், கஜபதி மற்றும் கந்தமால் மாவட்டங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது என்று முதலமைச்சர் மோகன் சரண் மாஜி தெரிவித்தார்.
"ஆந்திரப் பிரதேச எல்லையில் உள்ள மல்கங்கிரி மாவட்டத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் 'அர்னாப்' புயல் கஞ்சாம், கஜபதி மற்றும் கந்தமால் மாவட்டங்களில் பெரும் சேதத்தை விளைவித்துள்ளது" என்று அவர் கூறினார்.
இந்த மூன்று மாவட்டங்களிலும் தொடர்ந்து பெய்த பலத்த மழையினால் ஆறுகளில் நீர்மட்டம் அபாயகரமாக உயர்ந்ததுடன், சுமார் ஒரு டஜன் இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. கந்தமால் மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு நிலச்சரிவில், தம்பதியினர் மற்றும் அவர்களது ஒன்பது மாத குழந்தை உயிரிழந்ததாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
நவம்பர் 3-ஆம் தேதி முதல் மூன்று நாள் பயணமாக ஒடிசாவுக்கு வரவிருந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு தனது பயணத்தை ரத்து செய்தார். மேலும், அவர் முதலமைச்சருடன் தொலைபேசியில் பேசி, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலம் குறித்து விசாரித்தார்.
மாநில அரசு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஞ்சாம் மாவட்டத்தில், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் நான்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
நிவாரண முகாம்களில் 23,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியிருந்தாலும், வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் சிக்கியிருப்பவர்களின் எண்ணிக்கை இதைவிட மிக அதிகம் என்று பூஜாரி கூறினார்.
மாநிலம் முழுவதும் பணியமர்த்தப்பட்டுள்ள 313 மீட்பு குழுக்களில், 100-க்கும் மேற்பட்ட குழுக்கள் கஞ்சாம் மற்றும் கஜபதி மாவட்டங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
கஞ்சாம் மாவட்டத்தில் சுமார் 50,000 பேரும், கஜபதி மாவட்டத்தில் 30,000 பேரும், கந்தமால் மாவட்டத்தில் 12,000 பேரும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.