

வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை முறை உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து (IBA) உறுதியான வாக்குறுதி கிடைத்ததை தொடர்ந்து, வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தங்கள் மூன்று நாள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைத்தன.
வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு (UFBU) திங்கட்கிழமை முதல் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது; இக்காலகட்டம் வங்கிகளின் அரையாண்டு கணக்கு முடிப்பு பணிகளுடன் ஒத்துப்போகிறது. வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதால், திங்கட்கிழமையன்று வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்.
"மீதமுள்ள சனிக்கிழமைகளை விடுமுறை நாட்களாக அறிவிப்பது தொடர்பான விவகாரத்தை ஆராய, IBA மற்றும் UFBU ஆகியவற்றின் பிரதிநிதிகளை கொண்ட உயர்மட்ட குழு ஒன்று உடனடியாக அமைக்கப்படும்.
இக்குழு சாத்தியமான அனைத்து மாற்று வழிகளையும் ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் - குறிப்பாக வாடிக்கையாளர்களுடனும் - கலந்தாலோசித்து, அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை உருவாக்கும்," என்று UFBU தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
'ஸ்கேல் IV' மற்றும் அதற்கு மேற்பட்ட நிலை அதிகாரிகளுக்கான செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டம் குறித்து, சங்கங்களின் கருத்துக்களை கருத்தில் கொண்டு இத்திட்டத்தில் மாற்றங்களை செய்ய அரசுக்கு பரிந்துரைப்பது தொடர்பாக IBA-வுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம் என்றும் அது கூறியது.
மார்ச் 08, 2024 தேதியிட்ட கூட்ட குறிப்புகளில் பட்டியலிடப்பட்டுள்ள எஞ்சிய விவகாரங்கள் குறித்தும், விரைவான தீர்வை காண சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அது தெரிவித்தது.
மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு, திட்டமிடப்பட்டிருந்த போராட்ட நடவடிக்கைகள் மற்றும் வேலைநிறுத்த போராட்டங்களை ஒத்திவைக்க UFBU ஒப்புக்கொண்டது என்றும் அது மேலும் கூறியது.