

கொல்கத்தாவில் உள்ள துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு பிரதமர், ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் முக்தா ராம் பாபு தெருவில் உள்ள சோர்பகன் சர்போஜனின் துர்கா பூஜை பந்தலில் இன்று மாலை மக்கள் கூடியிருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
பலர் மயங்கி விழுந்தனர். இதுவரை குறைந்தது 17 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. குறைந்தது 25 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து கொல்கத்தா காவல்துறையினர், மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் தீயணைப்பு குழுக்களுடன் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் 25 காயமடைந்த நிலையில், அவர்களில் குறைந்தது 15 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், முதலமைச்சர் சுவேந்து அதிகாரி கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களின் சிகிச்சை குறித்து விசாரித்தார்.
பூஜை ஏற்பாட்டாளர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரிக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
மழையிலிருந்து தப்பிக்க, வரிசையில் நின்றிருந்த பலர் பந்தலுக்குள் நுழைய முயன்றனர். பின்னாலிருந்து அழுத்தம் அதிகரித்ததால், முன்னால் நின்றவர்கள் விழத் தொடங்கினர்.
சில கணங்களில், பலர் ஒருவர் மீது ஒருவர் விழுந்து நசுக்கப்பட்டனர். நேரில் பார்த்த ஒருவர், அவர் தனது மூன்று தோழிகளுடன் பந்தலை விட்டு வெளியேறிக் கொண்டிருந்ததாகக் கூறினார்.
பின்னாலிருந்து ஏற்பட்ட ஒரு பலமான தள்ளலுக்குப் பிறகு, மக்கள் கீழே விழத் தொடங்கினர். அவரது மூன்று தோழிகளும் கூட்ட நெரிசலில் சிக்கி நசுக்கப்பட்டனர்.
மக்களுக்கு மூச்சுவிடச் சிரமமாக இருந்தது. பின்னர், உள்ளூர்வாசிகள் பந்தலின் மற்றொரு பகுதியை உடைத்து, உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
இதற்கிடையில், இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி திரௌபதி முர்முவும் இந்த விபத்து குறித்து தனது இரங்கலைத் தெரிவித்தார்.
சமூக வளைத்தளத்தில் அவர் பதிவிட்டதாவது, "கொல்கத்தாவில் உள்ள துர்கா பூஜை பந்தலில் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கொல்கத்தாவில் உள்ள சோர்பகன் பொது துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்த மிகவும் வருத்தமான செய்தி இப்போதுதான் கிடைத்தது. இது தொடர்பாக முதலமைச்சர் சுவேந்து அதிகாரியுடன் பேசினேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த பக்தர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்களுக்கு நிர்வாகம் அனைத்து விதமான மருத்துவ வசதிகளையும் செய்து வருகிறது.
நாளை மேற்கு வங்கத்தில் உள்ள எனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைத்துவிட்டு, காயமடைந்தவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்குச் செல்வேன்.
காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய துர்கா தேவியிடம் பிரார்த்திக்கிறேன்." என தெரிவித்துள்ளார்.