நேபாளத்தில் வாகனம் கவிழ்ந்து 14 பேர் பலி

மின்சார வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 500 முதல் 700 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
Nepal
Published on: 

மத்திய நேபாளத்தின் மக்வான்பூர் மாவட்டத்தில் மின்சார பயணிகள் வாகனம் ஒன்று சாலையிலிருந்து கவிழ்ந்து விழுந்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நேபாளத்தில் பயணிகள் மின்சார வாகன விபத்தில் குறைந்தது 14 பயணிகள் உயிரிழந்ததை காவல்துறை உறுதிபடுத்தியுள்ளது.

மக்வான்பூர் மாவட்டத்தின் பிம்பேடி கிராமப்புற நகராட்சிக்கு உட்பட்ட சிசாபானி காதி என்ற மலைப்பாதையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.தலைநகர் காத்மாண்டுவிலிருந்து தெற்கு நேபாளத்தின் சர்லாஹி மாவட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த மின்சார மைக்ரோபஸ், கட்டுப்பாட்டை இழந்து சுமார் 500 முதல் 700 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

சத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகச் சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்த ஒரே பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார் இந்த வாகனத்தில் பயணித்துள்ளனர்

ஆரம்பத்தில் 10 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், பிற்பகலில் மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 9 ஆண்கள் மற்றும் 5 பெண்கள், குழந்தைகள் அடங்குவர்.

உயிரிழந்தவர்களில் ஓட்டுநர் ரவி சங்கர் குமார் மண்டல் உட்பட 14 பேரும் சர்லாஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என மாவட்ட காவல்துறை செய்தித் தொடர்பாளர் மாதவ் காஃப்லே உறுதிப்படுத்தியுள்ளார்

விபத்து நடந்த இடத்திற்கு நேபாள ராணுவம், ஆயுதப்படை காவல்துறை மற்றும் நேபாள காவல்துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஹெட்டவுடா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

X