

கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து நடப்பாண்டுவரை மொத்தம் 111 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தாவி உள்ளனர். நாகாலாந்து மாநிலத்தில் மட்டும் 32 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறினர்.
நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து 2026-ம் ஆண்டுவரை கட்சி தாவிய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம், தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள் ஆய்வு நடத்தின.
தனிநபர்கள் கட்சி தாவல், கட்சிகள் இணைப்பு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன்படி, இந்த காலகட்டத்தில் 78 எம்.எல்.ஏ.க்கள், 26 மக்களவை எம்.பி.க்கள், 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் என மொத்தம் 111 மக்கள் பிரதிநிதிகள் கட்சி தாவி உள்ளனர்.
அதிகபட்சமாக, நாகாலாந்து மாநிலத்தில் 32 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவினர். அவர்களில் 25 பேர், ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்கள். அவர்கள் உள்பட 32 பேர், நாகா மக்கள் முன்னணியில் இணைந்தனர்.
அடுத்தபடியாக, மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மக்களவை எம்.பி.க்களாக இருந்த 20 பேர் அதில் இருந்து விலகி, இந்திய தேசிய குடிமக்கள் கட்சியில் இணைந்தனர். இந்த கட்சி தாவல், மக்களவை சபாநாயகரின் விசாரணையில் உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் பாரத் ராஷ்டிர சமிதி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவினர். கோவா மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை எம்.பி.க்களும், 2 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவில் சேர்ந்தனர். டெல்லியில் ஒரு ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி.யும், பா.ஜ.க-வில் சேர்ந்தார்.
மராட்டிய மாநிலத்தில் சிவசேனா (உத்தவ்) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மக்களவை எம்.பி.க்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு தாவினர்.
மேகாலயாவில் 6 எம்.எல்.ஏ.க்கள், மணிப்பூரில் 5 எம்.எல்.ஏ.க்கள், அருணாசலபிரதே சம், குஜராத்தில் தலா 4 எம்.எல்.ஏ.க்கள், இமாசலபிரதேசம், ராஜஸ்தானில் தலா 2 எம்.எல்.ஏ.க்கள், கர்நாடகா, மத்தியபிரதேசம், சிக்கிம், உத்தரபிரதேசம் ஆகிய மாநி லங்களில் தலா ஒரு எம்.எல்.ஏ. ஆகியோரும் கட்சி தாவியவர்களில் அடங்குவர்.
கட்சிவாரியாக பார்த்தால், தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியில் இருந்து அதிக அளவாக 25 எம்.எல்.ஏ.க்கள் வெளியேறி உள்ளனர்.
திரிணாமுல் காங்கிரசில் இருந்து 20 பேரும், காங்கிரசில் இருந்து 19 பேரும், ஆம் ஆத்மியில் இருந்து தலா 7 பேரும், சிவசேனாவில் (உத்தவ்) இருந்து 6 பேரும், ஐக் கிய ஜனதாதளத்தில் இருந்து 5 பேரும் வெளியேறி உள்ளனர்.
கட்சி தாவியவர்களில் அதிக அளவாக நாகா மக்கள் முன்னணியில் 32 பேரும், பா.ஜனதாவில் 29 பேரும் இணைந்துள்ளனர். ஆட்சி மாற்றம் காரணமாக கட்சி தாவல்கள் நடந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தகுதிநீக்க மனுக்கள் மீது முடிவெடுக்கும் அதிகாரத்தை சபாநாயகருக்கு பதிலாக ஜனாதிபதி மற்றும் கவர்ன ருக்கு மாற்ற வேண்டும் என்று அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.