

ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அங்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. அரசியல் கட்சிகளின் பிரசாரமும் சூடு பிடித்தது.
இந்த நிலையில் ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
வருமான வரித்துறையினரும் சோதனை நடத்திய போது கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் தொடர்பான விவரங்களை தேர்தல் கமிஷனரிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
இதற்கிடையே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. நேற்று துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி வெளியிட்டார்.
அப்போது தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று நிருபர்கள் தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், “ஆர். கே. நகர் தொகுதிக்கு தேர்தல் நடத்த சாதகமான சூழல் குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. சாதகமான சூழல் உருவானதும் தேர்தல் நடத்தப்படும்.