

சென்னை:
அ.தி.மு.க. அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியதாவது:-
மாட்டிறைச்சிக்கு தடை விதித்ததன் மூலம் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு இந்தியாவின் பன்மை தன்மை தத்துவத்துக்கு பாடை கட்ட துடிக்கிறது.
ஒரு தனிமனிதனின் உணவு விசயத்தில் அரசு தலையிடுவது மிகப்பெரிய அத்துமீறல். மாட்டிறைச்சிக்கு தடை என்பதன் மூலம் நோன்பு காலத்தில் கோடிக்கணக்கான சிறுபான்மை மக்களின் நெஞ்சத்தில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
அச்சத்தில் இருந்து விடுதலை, பசியில் இருந்து விடுதலை, அறியாமையில் இருந்து விடுதலை. இதுதான் ஒரு அரசு செய்ய வேண்டிய பணி. ஆனால் கோடிக்கணக்கான சிறுபான்மை மக்களை அச்சத்தில் ஆழ்த்தி பதட்டமான சூழ்நிலைக்கு தள்ளி இருக்கும் இந்த தடை உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். ஆயிரம் மலர்கள் மலரும் நந்தவனத்தை பாதுகாக்க வேண்டும்
இந்த விசயத்தில் தமிழக அரசு மவுனம் காக்க கூடாது. கேரளா, மேற்கு வங்களாத்தை பின்பற்றி தமிழக அரசும் மனவும் கலைக்க வேண்டும்.
மக்களின் வணிகத்தோடும், வாழ்க்கையோடும் விளையாடும் வல்லாதிக்கத்தின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.